முன்னணியினை விமர்சித்த அங்கஜன் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து திருப்தி!

0

அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகின்ற நிதி எந்த விதத்திலும் தமக்கு தேவைப்படாது என்ற அடிப்படையிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களித்துள்ளதாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற பண்முகப்படுத்தப்பட்ட நிதியும் வரவு செலவு திட்டத்தின் மூலம்தான் ஒதுக்கப்படுகின்றது எனவும் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சொத்துகள் அதிகமாக இருப்பதனால் அவர்கள் தமது  சொந்த நிதியிலேயே செலவு செய்வார்கள் எனவும், அதனால் குறித்த நிதி தேவைப்படாது என்ற அடிப்படையில் எதிர்த்து வாக்களித்திருக்கலாம் எனவும் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு வரவு செலவு திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கான ஒதுக்கீடு போதுமானதாக இல்லையென அரசியலுக்காகவே தமிழ்த் தேசியக் கூட்மைப்பு கூறுவதாகவும், ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததை பார்க்கும் போது வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கீடு வடக்கு, கிழக்கு மக்களுக்கு போய் சேரவேண்டும் எனும் அக்கறையில் தான் கலந்து கொள்ளாமல் இருந்திருப்பார்கள் என தான் கருதுவதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.