முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்

0

புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளைப் பயன்படுத்தி மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கு புலம்பெயர் தரப்பினரால் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலைமை ஏற்படாது என மக்கள் எண்ணக்கூடாது எனவும், புலனாய்வுப் பிரிவு சிறப்பாக செயற்படாவிட்டால் தம்மால் வெற்றி பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கையில் கொவிட்-19 தற்போதைய நிலை மற்றும் எதிர்கால அபிவிருத்திகள்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் நியமனம் கிடைக்கப் பெற்றுள்ளமையானது நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுவதற்கு கிடைக்கப் பெற்ற சிறந்ததொரு வாய்ப்பாகவே கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற அவருடைய தேர்தல் கொள்கைப் பிரடனத்தில் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்திற்கே முதலிடம் அளித்திருந்தார் என்றும் தேசிய பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்படும் வரை உலகத்தில் காணப்படும் எந்தவொரு நாட்டுக்கும் வளர்ச்சி என்ற ஒன்றை பற்றி நினைப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் காணப்படும் பிரதான சவாலாக அமைவது பிரிவினைவாதமாகும் என கமல் குணரத்ன கூறியுள்ளார்.

2009 மே மாதம் 19ஆம் திகதி பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதோடு மீண்டும் இது போன்றதொரு அச்சுறுத்தல் ஏற்படாது என்று எண்ணலாம். ஆனாலும் அந்த அமைப்பில் காணப்பட்ட 12, 242 பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாகவும் ஈழவாதத்திற்கு ஆதரவளிக்கும் குழுவினர் புனர்வாழ்வளிக்கப்பட்ட குறித்த இளைஞர் யுவதிகளை உபயோகித்து மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், எமது புலனாய்வுப்பிரிவு சிறப்பாக செயற்படாவிட்டால் எம்மால் வெற்றி பெற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.