முஸ்லிம்களிடையே பாரிய வேறுபாடுகளை அறிந்தேன்: அஜித் ரோஹன

0

முஸ்லிம்களிடையே உள்ள பாரிய வேறுபாடுகள் மற்றும் தான் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்த போது கடற்கரை பள்ளிவாசல் தொடர்பாக மேற்கொண்ட மேற்பார்வைகள் குறித்தும் பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சாட்சியமளித்துள்ளார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்டுக்கு முன்னர் தாக்குதல்கள் தொடர்பாக உளவுத் தகவல்கள் கிடைந்திருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அந்த தகவல் உளவுத் தகவலே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பாக கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக்க டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.

இதன்போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு சாட்சியமளித்தார்.

அவர் குறிப்பிடுகையில், “2019 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆகும் போது போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நான் கடமையாற்றினேன்.

அப்போது அவ்வருடம் ஏப்ரல் 10,11,12 ஆம் திகதிகளில் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க விடுமுறையில் சென்றதால் அவரது பதவியில் நான் பதில் கடமைகளை முன்னெடுத்தேன்.

இதேவேளை, உண்மையில் முஸ்லிம்களிடையே வேறுபாடுகள் உள்ளன என்பதை நான் 2015 இலேயே அறிந்துகொண்டேன். நான் 2015 இல் கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்தேன்.

அப்போது, சுகததாஸ அரங்கில் தெளஹீத் ஜமா-அத்தினால் ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பல முஸ்லிம் தரப்புக்கள் என்னைச் சந்தித்து அதற்கு அனுமதியளிக்க வேண்டாம் எனக் கோரின.

அவர்கள் பரிசுத்த குர் ஆனுக்கு மாற்றமான போதனைகளை விதைக்க முற்படுவதாகவும் அவை ஆபத்தானவை எனவும் அவர்கள் கூறினர். எனது ஞாபகத்தின் படி அப்துல் ராசிக் என்பவரே அம்மாநாட்டை நடத்த சுகததாஸ அரங்கை ஒதுக்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக மத்துரட்ட இருந்தார். அவரிடம் கூறிவிட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் முன்னெடுத்தேன். தனிப்பட்ட ரீதியில் நானே அங்கு சென்று அவதானித்தேன். அங்கு சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சொற்பொழிவுகள் இடம்பெற்றன” என்று தெரிவித்தார்.

இதையடுத்து ‘அங்கு முஸ்லிம் அல்லாதோரைக் கொலைசெய்ய வேண்டும்’ என்ற கருத்துக்கள் கூறப்பட்டனவா என ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் வினவினர்.

இதற்கு, “இல்லை. அவ்வாறான கருத்துக்கள் கூறப்படவில்லை. தமிழில் பேசப்பட்ட விடயங்களைக்கூட நான் மொழிபெயர்த்து எனது அதிகாரிகளிடம் கோரினேன். அப்படி எவையும் கூறப்படவில்லை” என்றார்.

மேலும், “நான் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய போது, கல்முனைப் பகுதியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. அது கடற்கரைப் பள்ளி என அழைக்கப்படும்.

அங்கு வருடாந்தம் ஒரு உற்சவம் இடம்பெறும். அந்த உற்சவத்துக்கு பெரும்பாலான முஸ்லிம்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். சம்பிரதாய முஸ்லிம்களே அதனை எதிர்த்தனர். அம்முறைமை சம்பிரதாய முஸ்லிம்களின் கொள்கைகளுக்கு முரணானது என அப்போது விசாரித்தில் அறிந்துகொண்டேன்” எனச் சாட்சியமளித்தார்.