மேய்ச்சல் தரை செய்திகளை வெளியிட்டதாக கூறி ஊடகவியலாளர் மீது தீவிர விசாரணை!

0

மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் நடைபெறும் அத்துமீறிய காணி அபகரிப்பு மற்றும் அதன் ஊடாக பண்ணையாளர்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதிகள் குறித்த செய்திகளை வெளியிட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தன் பொலீசாரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை மதியம் அவரது வீட்டிற்கு பொலீஸ் வாகனத்தில் சென்ற நான்கு பேர் கொண்ட பொலீஸ் குழு ஊடகவியலாளர் நிலாந்தனை சுமார் ஒன்றரை மணித்தியாலம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவரிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்து அவரது கையொப்பத்தையும் பெற்றுச் சென்றுள்ளனர்.

எந்த வித முன்அறிவித்தலோ அல்லது எழுத்து மூல அழைப்பாணையோ வழங்காது திடீரென அவரது வீட்டிற்கு வந்த ஏறாவூர் பொலிஸார் வீட்டுக்குள் நுளைந்து விசாரணைகளை மேற்கொண்டு இருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரை பகுதிக்கு சென்ற ஊடகவியலாளர்கள், அவர்கள் எந்தெந்த ஊடகங்களுக்காக பணியாற்றுகின்றனர் அவர்களது பெயர் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை பெற்றுக்கொண்ட பொலீசார்.

மீனகம் இணையத்தளத்திற்கு நீங்கள் செய்தி அனுப்புகிறீர்களா? நீங்கள் எந்தெந்த மீடியாக்களுக்கு செய்திகளை அனுப்புகிறீர்கள் உள்ளிட்ட பல தகவல்களை பதிவு செய்து சென்றனர்.

ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளருமான செல்வக்குமார் நிலாந்தனின் வீட்டிற்கு திடிரென சென்று விசாரணைகளை நடத்திய பொலீசார யார் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைவாக விசாரணை செய்தனர்? வீட்டிற்கு சென்று வாக்குமூலம் பெறப்பட்டமைக்கான காரணங்கள் எதனையும் வெளியிட மறுத்துவிட்டனர்.

நேற்று முந்தினம் பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட ஆளும் கட்சி அரசியல் வாதிகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த காணொளி பல ஊடகங்களில் வெளியாகிய இருந்த நிலையில் நேற்று குறித்த செய்திகளை சம்பவ இடத்திற்கு சென்று சேகரித்த ஊடகவியலாளர்கள் குறித்த விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் நிலாந்தன் மீது இதற்கு முன்னரும் இலங்கை புலனாய்வு துறையினர், பொலீசார் பல்வேறுபட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவருடைய ஊடக செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.