மேல்மாகாணத்தில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள்

0

மேல்மாகாணத்தில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரையில் பல்வேறு நோய் அனர்த்த குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இருப்பினும் நிலைமை மேலும் 100 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்க முடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கட்டுப்பாடு எமது கையிலிருந்து நழுவிச் செல்லவில்லை என்பதுடன் நிலைமை கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக பொறுப்புடன் தெரிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெசாக் காலப்பகுதி வரை இந்த கடுமையான கண்காணிப்பை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் மேலும் சில காலம் செல்லும் வரையில் சுகாதர ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக நாளாந்த கடமைகளை மேற்கொள்வது கட்டாயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர் பரிசோதனையின் எண்ணிக்கை 1500 ஆக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் இந்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் குழுக்கள் எவை என்பது எதிர்நோக்கும் நிலைமைக்கு அமைய தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தேவையேற்படுமாயின் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை 3000 வரையில் அதிகரிப்பதற்கு தற்பொழுது ஆற்றல் உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொது மக்கள் உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதே நோயைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.