மே அல்லது ஜூன் இறுதிக்குள் நாடு பேரழிவை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகும் – சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை

0

உரிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிடுவதன் மூலம் அரசாங்கமும் சுகாதார அமைச்சும் புத்திசாலித்தனமாக செயற்படாவிட்டால், நாட்டில் மூன்றாவது அலை கோவிட் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகள் குறித்து இதுவரை எந்த விதிகளும் விதிமுறைகளும் வெளியிடப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. பொது மக்களின் இயக்கமும் வழமைக்கு திரும்பியுள்ளது. உயிர்த்த ஞாயிறு மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டைக் கொண்டாட நாடு தயாராகி வருகிறது.

இந்தநிலையில், அரசாங்கமும், சுகாதார அமைச்சும் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவில்லையெனில் நாடு மூன்றாவது அலை கோவிட் தொற்று நோயை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்று ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும், இல்லையென்றால், மே அல்லது ஜூன் இறுதிக்குள் நாடு ஒரு பேரழிவுகரமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் என்று உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.