மே-18 தமிழர் வாழ்வியலின் இன்னுமொரு கருங்கறுப்பு நாள்

0

மே-18, தமிழர் வாழ்வியலின் இன்னுமொரு கருங்கறுப்பு நாள் எனவும் சிறீலங்கா அரசின் நீண்ட ஒரு இனவழிப்பின் பெரு நினைவு நாளாகும்  என்றும் வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பதினொரு ஆண்டுகள் கடந்தும் முள்ளிவாய்க்கால் நினைவுகளோடு தமது உறவுகளைத் தேடிவருவதாக உறவுகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உரிமை கேட்டுப் போராடிய தமிழினத்தின் மீது மனித மாண்புகள், விழுமியங்களை மீறி தனது வெறியாட்டத்தினை சிறீலங்கா அரசாங்கமும் படையினரும் கட்டவிழ்த்துவிட்டதினை உலகத் தமிழினம் ஆற்றாமையோடும், சோகத்தோடும் நினைவு கூரும் தேசிய துக்க நாள்.

பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும், எமது சோகங்களும் கண்ணீரும் தொடர்கதையாகவே இருக்கின்றன. முள்ளிவாய்க்காலில் தரை, கடல் மற்றும் வான் ஆகிய முப்படையினரின் குண்டு மழையினையும்,கொத்தணிக் குண்டுகளையும், இரசாயனக் குண்டுகளையும் கடந்துவந்த நாம் எமது பிள்ளைகளையும், துணைவர்களையும், சகோதரங்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் சரணடைதலின் போது சிறீலங்காப் படையிடம் எமது கையாலேயே ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

முகாம்களில் நடைபெற்ற தொடர் கைதுகளின்போது எஞ்சியிருந்த சொந்தங்கள் பலரை சிறீலங்காப் படையினரும், புலனாய்வுத் துறையினரும் கைதுசெய்து கொண்டுசென்றனர். இவ்வாறு சரணடைந்தவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதுடன் அவர்கள் தொடர்பான எதுவிதமான தகவல்களையும் இன்றுவரை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

எமது உறவுகளைத் தேடி பல்வேறு முயற்சிகளை 2009 முதல் பல்வேறு தளங்களில் மேற்கொண்ட போதும் எமக்கு எவ்வித பலனும் கிட்டவில்லை. எமது உறவுகளின் நிலை என்ன என்ற வினாவுக்கு, விடையைத் தேடி எம்மால் கூட்டாக ஒருங்கமைக்கப்பட்ட தொடர் போராட்டம், ஆயிரத்து 181 நாட்களைக் கடந்து சென்ற பின்பும் எமது தேடுதலுக்கு எவ்வித பதில்களுமின்றி நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன.

சிறீலங்காவில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டும் கூட எமது வலிகளுக்கு முடிவேதும் இல்லை. கடந்த பதினொரு வருடங்களாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்களால் நாம் தொடர்ந்தும் ஏமாற்றுப்பட்டுக் கொண்டே வந்துள்ளோம். அத்துடன் சுயநலம், கட்சி இலாபம் கருதி எமது உரிமைசார் போராட்டம் புறக்கணிக்கப்படுவத்தினையும் வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.

ஆகவே, இனி வரவிருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு, தமிழ் இனத்தின் தற்போதைய தலையான பிரச்சினைகளில் ஒன்றான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பாக காத்திரமான பொறுப்பும், கடமையுண்டு என இங்கு இடித்துரைக்க விரும்புகின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில், எமது தொடர் போராட்டத்தில் நாம் தொடர்ந்து வலியுறுத்திவரும் எமது ஐந்து அம்சக் கோரிக்கைகளை மீண்டும் சிறீலங்கா அரசாங்கத்திடமும் சர்வதேசத்திடமும் ஆணித்தரமாக முன்வைக்கின்றோம்.

(1) யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும்,இறுதி யுத்தம் முடிவிற்கு வந்த 2008-2009 தருணத்தில் சரணடைந்தவர்கள் உள்ளடங்கலாக கைது செய்யப்பட்டவர்கள், சகலரினதும் பெயர்ப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.

(2) தற்போது சிறைகளில் வாடும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை உடனடியாக வெளியிடுவதுடன்,அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

(3) யுத்தத்தின் போதும்,யுத்தத்தின் பின்னரும் சிறீலங்கா இராணுவத்தினராலும்,காவற் துறையினராலும் கடத்தப்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை உடனடியாக வெளியிட வேண்டும்.

(4) புனர்வாழ்வு அளிக்கப்பட்டு இன்றுவரை விடுதலை செய்யப்படாத போராளிகளை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்து சமூகத்துடன் இணைக்க வேண்டும்.

(5) தமிழர் பிரதேசத்தில் தொடரந்து நடைபெறும் இராணுவமயமாக்கல் உடனடியாக நிறுத்தப்படுவதுடன் தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் எவ்வித அடக்கு முறைகளும் இன்றி, சுதந்திரமாகவும்,சுய கெளரவத்துடனும் வாழ்வதற்கான அரசியல் தீர்வினை விரைவாக வழங்க வேண்டும்.

எமது இனிய உறவுகளே! எப்போதும் எமது மனங்களில் ஆறாத வடுவாகவும், நீங்காத நினைவாகவும் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தற்போதைய கொவிட்-19 பரவல் காரணமாக மிக எளிய முறையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மே மாதம் 18 திகதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு செய்து வருகின்றது.

தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த நினைவுகூரலில் கலந்துகொள்ள முடியாதவர்கள், தத்தமது வீடுகளில் மாலை 7 மணிக்கு தீபம் ஏற்றி நினைவுகூரலை அனுஷ்டிக்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் மாறாத அடையாளமான, முள்ளிவாய்க்கால் கஞ்சியினை உங்கள் வீடுகளில் காய்ச்சி நினைவு தின மரபினை தொடருமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் எம்மாலும், எமது வருங்காலச் சந்ததியினராலும் தொடர்வதன் மூலமே எமது இன விடுதலையை வென்றெடுக்கும் ஆறாத அவாவினை அணையாது பாதுகாக்க முடியும் என்பதை இதில் பதிவுசெய்ய விரும்புகின்றோம்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்கும், எமது கண்ணீர் கலந்த வணக்கத்தைச் செலுத்துகின்றோம். இப் புனிதப் போரில் தமது அவயங்களை இழந்தவர்களுடனும், தமது உறவுகளை இழந்தவர்களுடன் கைகோர்த்து இந்நினைவு நாளை எம் மனதிலிருத்தி எமது விடுதலைப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

படுகொலை செய்யப்பட்ட உறவுகளை எண்ணி அஞ்சலி செலுத்துவோம். காணாமல் ஆக்கப்பட் உறவுகளை எண்ணி தேடி போராடுவோம்” என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்தள்ளது.