மே 28 இல் தேர்தலை நடத்த இணங்க முடியாது – பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்!

0

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி தேர்தலை நடத்த இணங்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு இன்று நடைபெறவுள்ள ஆணைக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கின்றீர்களா என வினவியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 28ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானியை வௌியிடுவதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது யோசனை முன்வைத்ததாக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் குறிப்பிட்டுள்ளார்.

அந்த யோசனையை நிராகரிக்கும் வகையில் இந்த கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 28ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதற்கு தாம் இணங்காதிருப்பதற்கான நிலைப்பாட்டினை நியாயப்படுத்துவதற்காக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஏழு விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரது பேஸ்புக் பக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் எழுந்துள்ள கருத்தாடல் தொடர்பிலான நிலைப்பாட்டினையும் அவர் தனது கடிதத்தில் தௌிவுபடுத்தியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குள் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள், குறிப்பாக கருத்தாடலுக்கு வித்திடுகின்ற அல்லது சமூக உணர்வை ஏற்படுத்தக் கூடிய விடயங்களை கலந்துரையாடுவதற்கு முன்னதாக ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவது தேர்தல்கள் ஆ ணைக்குழு பிற்பற்ற வேண்டிய நடைமுறை அல்லவெனவும் ரட்ணஜீவன் ஹூல் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிற்போடப்பட்டுள்ள தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமே உள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை பிற்போடுவது தொடர்பிலும் உடனடியாக நடத்துவது தொடர்பிலும் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும், எந்த கருத்துக்கள் எதுவும் தேர்தலை ஒத்திவைக்கவோ நடத்தவோ தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.