யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டவண்ணமுள்ளனர்.
அத்துடன், கோப்பாய் பொலிஸாரும் இராணுவமும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை. அதன்பின்னர், வருகைதந்த பொலிஸாரும் எவரையும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.
இதனால், பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை இன்றிரவு ஒன்பது மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் மாணவர்களால் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.