முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்புரிந்த நிலையில், உயிரிழந்த ஜூட் குமார் ஹிஷாலினி கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
ஜூட் குமார் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிகோரி நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 அகவை ஜூட் குமார் ஹிஷாலினி, தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஜூலை 03ம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில், 12 நாட்களின் பின்னர் அண்மையில் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிகோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நேற்றைய தினம் முன்னெக்கப்பட்ட போராட்டத்தில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.
“பாடசாலையில் கல்வி கற்க வேண்டிய வயதில் சிறுமிகள் பலர் வீடுகளுக்கு பணிப்பெண்களாக செல்கின்றனர். ஹிஷாலினி மரணமாகவில்லை. உண்மையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் பணியாற்றிய சிறுமி நெருப்பு வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த இளைஞர் ஒருவர், தனது மகளை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கியுள்ளதாக, ஜூட் குமார் ஹிஷாலினியின் தாய் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.