ரிஷாட் வீட்டில் 11 மலையக யுவதிகளுக்கு துன்புறுத்தல் − இருவர் மர்மமாக உயிரிழப்பு − இருவர் துஷ்பிரயோகம்

0

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு, மலையகத்திலிருந்து இதற்கு முன்னர் அழைத்து வரப்பட்டிருந்த 11 யுவதிகள் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதுடன், அவர்களில் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகளை மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு பணிப் பெண்ணாக பணிப் புரிந்த யுவதியொருவர் மர்மமான முறையில் பம்பலபிட்டி பகுதியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமொன்று தொடர்பிலும் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை, ரிஷாட் பதியூதீன் அமைச்சராக பதவி வகித்த காலப் பகுதியில், அவரது உத்தியோகப்பூர்வ வீட்டில் மலையக யுவதியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் தொடர்பில், ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரன் நேற்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட யுவதி, தான் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வீட்டின் அறை மற்றும் ஏனைய பகுதிகளை பொலிஸாருக்கு காண்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.

பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த தலைமையிலான குழுவொன்று, இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக மலையகம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த 16 வயதான ஹிஷாலினி, தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே, மலையக பெண்களுக்கு ரிஷாட் பதியூதீன் வீட்டில் இடம்பெற்ற கொடுமைகள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த 11 பெண்களுக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, இவ்வாறு பணியாற்றிய இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ஹிஷாலினியை இரவு வேளைகளில் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு அருகிலுள்ள மின்சாரம் இல்லாத அறையொன்றில் வீட்டின் உரிமையாளர்கள் பூட்டுவதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு வேளைகளில் மலசலகூடத்திற்கு செல்ல கூட முடியாத நிலையை ஹிஷாலினி எதிர்நோக்கியிருந்ததாக தெரிய வந்துள்ளது.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்ததாக கூறப்படும் குறித்த 11 யுவதிகளையும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இடைதரகரான பொன்னையாவே அழைத்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு மலையக யுவதிகளை பணிக்கு அழைத்து வருவதற்காக, ரிஷாட் பதியூதீன் தரப்பிலிருந்து லட்சக்கணக்கான பணத்தை இடைதரகர் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.