வடக்கு – கிழக்கில் தொல்பொருள்கள் தொடர்பான வழக்குகளை கொழும்புக்கு மாற்றத் தீர்மானம்

0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பாக இருந்துவரும் வழக்குகளை கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்ற ஜனாதிபதியிடம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி பௌத்த ஆலோசனை சபையின் 4வது கூட்டத்தில், தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்து மகாசங்கத்தினர் முன்வைத்த முன்மொழிவுகளை விசேட செயலணியின் கவனத்திற்கு கொண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் தொல்பொருள்களை பாதுகாத்து தேசிய மரபுரிமைகளை உறுதி செய்வதற்கு தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.

இச்சட்டம் எவ்வாறு திருத்தப்பட வேண்டுமென்பது குறித்து ஆராய்வதற்கு மகாசங்கத்தினர் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் தொல்பொருள் அழிவுகளை நிறுத்தி நாட்டின் மரபுரிமைகளை எதிர்கால தலைமுறைக்கு வழங்குவதில் நடைமுறையில் எழும் பிரச்சினைகளை தீர்ப்பது இச்சட்டத்தை திருத்தவதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

தொல்பொருள் திணைக்களத்திற்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதி ஏற்பாடுகளை அதிகரிக்கவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் தொல்பொருள்களை பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு சிவில் பாதுகாப்பு படையணியின் உதவியை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கடந்த 5 ஆண்டு காலப்பகுதியில் தொல்பொருள்களுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பாரிய சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட தேரர்கள் விகாரைகளுக்கு சொந்தமான புண்ணிய பூமிகள் பல்வேறு தரப்பினரால் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அதன் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த மரபுரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.