வறிய மக்களை இரையாக்கும் நிதிக் கம்பனிகள்: உரிய சட்டம் அவசியம்

0

நாடளாவிய ரீதியில் இயங்கும் அனைத்து நிதிக் கம்பனிகளும் மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் உரிய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் வகையிலான திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாவிட்டால், வறிய மற்றும் கல்வி அறிவற்ற மக்கள் குறித்த நிதிக் கம்பனிகளால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

நிதிக்கம்பனிகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் கொவிட்-19 இன் பின்னரான பங்குச்சந்தை நிலைவரம் குறித்து தனது டுவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “இலங்கையின் பின்தங்கிய, வறிய பிரதேசங்களில் பதிவுசெய்யப்படாத நிதிக் கம்பனிகள் தமது மிகமோசமான இரக்கமற்ற செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்படுப்பதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

உண்மையில் சில நிதிக் கம்பனிகளே மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படுகின்றன. ஏனைய கம்பனிகள் தமது தேவைகளுக்கு வறிய மற்றும் கல்வியறிவற்ற மக்களை இரையாக்குகின்றன.

அக்கம்பனிகள் அனைத்தும் உரிய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு செயற்படக் கூடியவாறான கட்டமைப்பொன்று உருவாக்கப்படுவது தற்போது மிகவும் அவசியமானதாகும்.

இதேவேளை, கொவிட்-19 வைரஸ் பரவலைத் தொடர்ந்து பங்குச் சந்தையானது பெரும் எண்ணிக்கையான பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்களை இழக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இந்த அச்சுறுத்தல் நிலை தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளைக் கொள்வனவு செய்வதை விடவும், அவற்றை விற்பனை செய்வதில் நாட்டம் காண்பிக்குமளவிற்கு அதிகரித்திருக்கிறது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.