விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரித்தானியாவின் பாதுகாப்பு நிறுவனம் செயற்பட்டதா?

0

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக பிரித்தானியாவின் பாதுகாப்பு நிறுவனம் செயற்பட்டதா? என்பது தொடர்பில் ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் 1980ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக பிரித்தானியாவின் பாதுகாப்பு நிறுவனத்தின் பங்கு குறித்து யார்டு போர்க்குற்ற குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு இலங்கையின் விசேட அதிரடிப்படைக்கு பிரித்தானியாவின் கே.எம்.எஸ். என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனம் பயிற்சி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பரிந்துரை கிடைத்ததாகவும் அது தற்போது விசாரணையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் யார்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

முன்னதாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளிவந்த பிரித்தானியாவை சேர்ந்த புலனாய்வு செய்தியாளர் பில் மில்லர் எழுதிய நூலில் இலங்கை உள்நாட்டுப் போரில் கே.எம்.எஸ். பாதுகாப்பு நிறுவனத்தின் போர்க்குற்றங்கள் குறித்து குறிப்புகள் இருந்தன.

இதுவே ஸ்கொட்லண்ட் யார்ட் போர்க்குற்ற குழுவின் விசாரணைக்கு வித்திட்டது என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.