விடுமுறையை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவர்! வலயக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா

0

மாணவர்களுக்குத் தரப்பட்ட விசேட விடுமுறையை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் மாணவர்கள் தமது கல்வி வாழ்க்கையில் வெற்றி பெறுவர் என மட்டக்களப்பு கல்வி வலயப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

சமகால கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள முடக்க நிலையினால்  மாணவர்களது கல்வி நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்கள் பயன்பெறக் கூடிய பல வழிமுறைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த அறிக்கையில் ,கொரோனா வைரஸ் தொற்று (COVID 19-Corona Virus Disease 2019) இன்று சர்வதேச  மட்டத்தில் பேரிடர் நிலையைத் தோற்றுவித்துள்ளதுடன் அதன் தாக்கம் இலங்கையையும் முடக்கியுள்ளது.

இதனால் ஒட்டுமொத்த நாடும் பேரிடர் ஒன்றுக்கு முகங்கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கின்றது. இது மிகவும் அச்சுறுத்தல் மிக்க சூழ்நிலையாகும். இதன் ஒரு படியாகவே இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

விசேட விடுமுறைக் காலம் மாணவர்களுக்கு மகிழ்ச்சியானதே. இந்த விடுமுறை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளிலும், அடைவிலும் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தக்கூடியது. இச் செல்வாக்கு சாதகமானதாக  அமைவதற்கு மாணவர்களும் பெற்றாரும் முயற்சிக்க வேண்டும்.

இலங்கையில் கல்வி அமைச்சு வருடாந்தம் பாடசாலை நாட்காட்டி மூலம் ஆண்டுக்கான பாடசாலை நாட்களை வரையறுத்துள்ளது. அது வருடாவருடம் 195 தொடக்கம் 200 நாட்கள் வரை வேறுபடுகின்றது.

வருடாந்தம் நாட்காட்டியில் வரையறுக்கப்பட்ட நாட்களுள் பாடவிதானத்தையும் இணைப்பாடவிதான செயற்பாடுகளையும் அமுலாக்கவேண்டிய தேவை இலங்கை அரச பாடசாலைகள் அனைத்துக்கும் உண்டு.

இவ் வருடம் 194 பாடசாலை நாட்களை உள்ளடக்கியதாக பாடசாலை நாட்காட்டி வெளியிடப்பட்டது. இதில் மூன்று தவணைக் காலத்துக்குமான பாடசாலை நாட்கள், பாடசாலை விடுமுறை நாட்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

பாடசாலை நாட்காட்டியின் அடிப்படையிலேயே இலங்கை அரச பாடசாலைகள் செயற்படுகின்றன. இவ்வாறு பாடசாலை நாட்காட்டியின் அடிப்படையில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் குறித்தொதுக்கப்பட்ட நாட்களுக்குள் திட்டமிட்டவாறு பாடவிதானத்தை அமுலாக்குவதில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன,

அதாவது, பாடசாலை நேரத்தில் நடைபெறும் ஆசிரியர் செயலமர்வுகள், பாடசாலை நேரத்தில் நடைபெறும் இணைப்பாடவிதான செயற்பாடுகள், பாடசாலைகளில் ஆசிரியர் கிடைப்பனவு, கற்பித்தல், கற்றல் வளங்களின் கிடைப்பனவு மாணவர்களின் தனியாள் வேறுபாடு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இதற்கும் மேலாக, இலங்கை அரச பாடசாலைகளில் பாடவிதானத்தை அமுலாக்குவதில் புறக்காரணிகளின் செல்வாக்கு அவ்வப்போது பெரும் சவாலைத் தோற்றுவிக்கின்றது.

அதாவது பாடசாலை நாட்காட்டியின் அடிப்படையில் முறையாகத் திட்டமிட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் நாட்டில் தோன்றும் அசாதாரண நிலைமைகளின் காரணமாக கல்வி அமுலாக்கம் பின்னடைவைச் சந்திக்கின்றது.

இது மாணவர்களின் கற்றலைப் பெரிதும் பாதிக்கின்றது. உதாரணமாக, 2019 ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலால் 3 வாரங்கள் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பின்னடைவாகக் காணப்பட்டது.

இந்த விடுமுறையை மாணவர்கள் அச்சத்தின் மத்தியிலும் மகிழ்ச்சிரமாகவே வரவேற்றனர். இவ்வாறான நிலைமை இனியும் நீடிக்காது என்று அனைவரும் மிகத்திட்டமிட்டு செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்தனர்.

2020 ஆம் ஆண்டை உலக நாடுகள் அனைத்தும் பெரிதும் எதிர்பார்ப்புடன் வரவேற்றனர். ஆனால் அந்த வரவேற்பு வருட ஆரம்பத்திலேயே கேள்விக்குள்ளாகிவிட்டது.

இன்று ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் ஒட்டுமொத்த மானிட சமூகத்திற்கும் எதிராக மாறிவிட்டது. ஒவ்வொருவரும் அச்சத்தின் விளிம்பில் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுவிட்டோம்.

ஆயினும், நாம் இயக்கமற்றவர்களாக இருந்து விடமுடியாது. எம் பிள்ளைகளின் கல்விக்கூடங்கள் ஓய்ந்திருந்தாலும் அவர்களின் கற்றல் செயற்பாடு மேலோங்க வேண்டும். அவர்களின் எதிர்காலம் மீதான சகல தாக்கங்களும் களையப்படல் வேண்டும்.

இவ்வாறான நிலைமை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யாரும் அறுதியிட்டுக் கூறமுடியாது. அத்தோடு அடுத்த வருடம் எந்தத் தலைப்பில் இவ்வாறான நிலைமை வரும் என்ற கேள்வியும் எம்மிடம் எழாமலில்லை.

ஆகவே, ஒட்டுமொத்த உலகும் சவாலை எதிர்கொண்டிருக்கின்ற இவ்வேளையில்  நாம் எமது இருப்பைப் பலப்படுத்தி எதிர்காலத்தை வளப்படுத்த கல்வியிலும் கற்றலிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்.

இதன்படி, மாணவர்கள் தமது நேரத்தை திட்டமிட்டு செயற்படுவதும் சுயகற்றலை மேம்படுத்தி கற்றல் பெறுபேற்றை அதிகரித்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது.

மாணவர்கள் இப்பொழுது  கற்றலை மட்டுப்படுத்திக்கொள்கின்றனர். வீட்டில் அன்றைய நாளுக்குரிய வீட்டுவேலைகளை செய்வதை மாத்திரம் வழக்கமாகக் கொள்கின்றனர்.

இவ்வாறு பழக்கப்பட்டுக்கொண்ட மாணவர்களுக்கு நீண்ட பாடசாலை விடுமுறை என்பது கற்றலில் உள்ள ஆர்வத்தைக் குறைத்து விடுமுறைக் காலத்தை விரயமாக்கும் நிலைக்கு வழிவகுக்கும்.

1983-2009 காலப்பகுதியில் எம் நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் நாம் பெற்ற அனுபவங்கள் பல. மாலை 6.00 மணி தொடக்கம் காலை 6.00 மணிவரை யாருமே வீட்டுக்கு வெளியே செல்ல முடியாத சூழ்நிலையில் முடக்கப்பட்டிருந்தோம்.

அப்போது, மாணவர்கள் மாலை 6.00 மணிக்கே படிப்பை ஆரம்பித்துவிடுவர். மாலை 6.00-9.00 மணி வரையிலான மூன்று மணித்தியாலங்கள் வினைத்திறன்மிக்க படிப்பை மேற்கொண்டனர். இவ்வாறே காலை 4.00-6.00 மணி வரை 2 மணித்தியாலங்கள் கற்றனர். சராசரியாக 5 மணித்தியாலம் வீட்டில் சுயகற்றல் ஊக்குவிக்கப்பட்டது.

எமது பிரதேசத்தில் அச்சம் நிறைந்த நிகழ்வுகள் நடந்தேறிய போதிலும் மாணவர்களின் சுயகற்றல் உச்சப் பெறுபேற்றைப் பெற்றுத் தந்தது. தரம் 5 புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளியும், பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளியும் ஏனைய பிரதேசங்களை விட வடக்கு கிழக்கு மாகாணத்தில் உச்சத்தில் இருந்தமை இதற்கு சான்றாகும்.

யுத்தம் மேலோங்கியிருந்த காலப்பகுதியில் வடமாகாணம் கல்வியில் முதலாம் இடத்தில் இருந்ததும் வரலாற்றுப் பதிவாக உள்ளது. இத்தகைய நம்பிக்கை மிகுந்த சாதகமான உதாரணங்களை இக்கால மாணவர்கள் அறிந்திருக்க நியாயமில்லாவிட்டாலும் இதனை உணரவைக்கும் பொறுப்பு கல்விப் புலத்தில் உள்ளவர்களிடமும் பெற்றோரிடமும் உள்ளது.

அரசு முன்வைத்துள்ள அவசரகால பிரகடனங்களுக்கு மதிப்பளித்து பின்பற்றுவது எமது தலையாய கடமையாகும். நாட்டில் அசாதாரண நிலைமைகளின் போது வழங்கப்படும் பாடசாலை விடுமுறைகளை பயனுள்ளதாக மாற்றிக்கொள்வது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

பாடசாலை விடுமுறை என்பது பொதுப்பாதுகாப்புக்காக வழங்கப்பட்டது, பொழுது போக்குக்காக உல்லாசத்திற்காக களியாட்டத்திற்காக வழங்கப்பட்டதல்ல.

பாடசாலை விடுமுறைக்காலத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் கற்றலுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலைத்தேய நாடுகளில் பெரும்பாலும் நிகழ்நிலை (Online) மூலமாக மாணவர்கள் சுயகற்றலில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், அதற்குப் போதுமான வசதிகள் எமது பிள்ளைகளுக்கு இல்லையாயினும் பிள்ளையின் சுயகற்றலுக்கான ஏற்பாடுகள் குறித்து கவனம் எடுக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றாரதும் பாதுகாவலர்களினதும் கடமையாகும்.

மாணவர்கள் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சா/த) பரீட்சை, க.பொ.த (உ/த) பரீட்சை, நிகழ்நிலை பொதுத்தகவல் தொழினுட்பப் பரீட்சை போன்றவற்றுக்கு தோற்றவேண்டியுள்ளது. இந்நிலையில், நாட்டின் அசாதாரண நிலைமையைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட விடுமுறையை கற்றலுக்குப் பயன்படும் காலமாக பிள்ளைகள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதற்கு மிகப் பொருத்தமான வழிமுறையாக சுயகற்றல் அமையும். இதன்படி, மாணவர்கள் சுயகற்றலில் ஈடுபடுவதற்காக பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கின்றேன்.

01. தரம் 5 மாணவர்கள் தங்களது புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெரும்பாலான பகுதிகளை தரம் 4 இல் பூர்த்தி செய்துள்ளனர். அவர்கள் தாம் தரம் 4இல் கற்ற விடயங்களையும் பயிற்சிகளையும் மீட்டல் செய்தல்.

02. இவ்வருடம் க.பொ.த (சா/த) மாணவர்கள் பெரும்பாலான பகுதிகள் தரம் 9, 10 களில் பூரணப்படுத்தப்பட்டுவிட்டது. அவற்றை மீட்டல் செய்தல்.

03. 2020ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தங்கள் கைகளில் போதுமான பாடக்குறிப்புக்களும் விடயங்களும் உள்ளன. அவற்றை மீண்டும் மீண்டும் கற்கும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். கடந்தகால வினாக்களைச் செய்து பார்ப்பதன் மூலம் இதுவரை கற்ற விடயங்களை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

04. ஏனைய அனைத்து தரங்களிலும் உள்ள மாணவர்களிடம் பாடப் புத்தகங்கள் தவணை ரீதியான பாட உள்ளடக்கத்துடன் உள்ளது. அதைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலம் பாட விடயத்தை விளங்கிக்கொள்ளலாம்.

05. ஆங்கிலம், இரண்டாம்மொழி சிங்களம், கணிதம் போன்ற பாடங்கள் சில மாணவர்களுக்கு சிரமமாக இருந்தாலும் அவற்றையும் ஆர்வமுடன் கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அதேவேளை, ஏனைய பாடங்கள் வர்ணப்படங்களுடன் கூடிய எளிய மொழிநடையும் கலந்த பாடநூல்களாக அமைந்துள்ளதால் அவை மிகவும் பெறுமதியாக அமையும்.

06. பாடப்புத்தகங்களை வாசித்து உரிய பயிற்சிக்கொப்பிகளில் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பாடசாலை ஆரம்பித்தவுடன் ஆசிரியர் மெச்சும் வகையில் அதனைக் காண்பிப்பதோடு ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்கும் உதவியாக அமையும்.

07. பாடசாலை ஆரம்பித்தவுடன் முதலாந் தவணைக்கான பரீட்சைகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான மீட்டலையும், வினாத்தாள்களையும் பரீட்சைபோல் திட்டமிட்டுச் செய்ய முடியும்.

08. குறிப்பெடுத்துக் கற்கும் விடயங்களை மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த்தல் வேண்டும். இவ்வாறு கற்ற விடயங்களை மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த்தல் பரீட்சைக்கு விடையளிக்கப் பெரிதும் உதவும்.

09. எப்போதும் குறிப்புக் கொப்பிகளில் இரண்டு பக்கமும் மார்ஜின் (Margin) இருத்தல் வேண்டும். வலது புறம் அப் பக்கத்தின் உள்ள விடயத்தின் சுருக்கம் அமைவதோடு இடது புறம் இவ் விடயம் கடந்த காலங்களில் பொதுப் பரீட்சைக்கு வந்திருப்பின் அந்த ஆண்டும், வினா இலக்கமும் குறித்துக்கொள்ளல் வேண்டும். இதனால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் குறிப்புக்கள் பெறுமதியானதாக அமையும்.

10. உங்கள் கையில் இருக்கும் பெறுமதியான குறிப்புக்கள் பரீட்சைக்கு தெளிவாக வழிப்படுத்தும் பரீட்சை வினாத்தாள் தொடர்பாக உங்கள் மனதில் தெளிவையும் எதிர்வுகூறலையும் மேம்படுத்தும், பரீட்சைப் பயத்தைப் போக்கும், சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ள வழிப்படுத்தும்.

சில குடும்பங்களில் தாய் தந்தை பிள்ளைகள் அனைவரும் விசேட விடுமுறைக் காலத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய குடும்பங்களில் மிகவும் திட்டமிட்டு உங்களது பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கையை ஒழுங்கமைக்க முடியும்.

இதை ஒரு உல்லாச விடுமுறையாகக் கருதி வெளியிடங்களுக்கு செல்லுதல், வெளியிடங்களில் தங்குதல் போன்ற செயற்பாடுகள் எமக்கும் பிறருக்கும் ஆபத்தைத் தேடித் தரலாம்.

சில குடும்பங்களில் தாய், தந்தை இருவரும் அல்லது ஒருவருக்கு அத்தியாவசிய சேவை கருதி விடுமுறை அற்றவர்களாக இருக்கலாம். அப்படிப்பட்ட பெற்றோர் உங்கள் பிள்ளைகளை சுயகற்றலுக்கு வழிப்படுத்தி திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும்.

இது பிள்ளைகளுக்கு சிறந்த ஊக்குவிப்பாகவும் அமைதல் வேண்டும். இதற்கு அரசு வழங்கியுள்ள இலவசப் பாடநூலை நீங்கள் மிகவும் சிறப்பான கருவியாகப் பயன்படுத்தலாம்.

மாலையில் பெற்றோர் வீடு திரும்பியதும் அவற்றை மதிப்பீடு செய்யக்கூடிய வகையில் வினாக் கேட்டல் அல்லது கடந்தகால வினாப்பத்திரங்களை வழங்கி மதிப்பீடு செய்யலாம்.

பாடசாலைக் கல்வியில் ஏற்படும் தாமதத்தை ஈடுசெய்ய இது பெற்றோரால் வழங்கப்படக் கூடிய ஒரு ஒத்துழைப்பாகும்.

இவற்றை நோக்கும்போது குறைந்த கல்வியறிவுடைய பெற்றாரின் பிள்ளைகளின் நிலை என்ன என்ற வினா எழுலாம். இது நியாயமானது. ஆயினும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களிலும், பெற்றோர் இன்றி அல்லது பெற்றேர் பிரிந்து வாழ்வதனால்

பாதுகாவலருடன் வாழும் பிள்ளையாக இருந்தாலும் அவர்கள் பிள்ளைகளின் கற்றலை மதிப்பிடும் ஆற்றல் அற்றவர்களாக இருந்தாலும் பிள்ளையுடன் இருந்து சில மணித்தியாலங்கள் பிள்ளை கற்கும் விடயத்தை அவதானிப்பதன் மூலமும் பிள்ளைக்கு கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து ஊக்குவிக்க முடியும்.

இவ்வாறு சுயகற்றல் ஊக்குவிக்கப்படுதல் என்பது விசேட பாடசாலை விடுமுறைகளால் ஏற்படும் கற்றல் பின்னடைவுக்கு பரிகாரமாக அமைவதோடு பிள்ளையின் கற்றல் ஆர்வத்தை மேம்படுத்தி கற்றல் பேறுபேற்றை அதிகரிக்க வழி செய்யும்.

சுயமாக படிக்கத் தொடங்கும் ஒவ்வொரு பிள்ளையும் தனக்குப் பொருத்தமானவாறு கற்றல் இலக்கைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

தான் கற்கவேண்டிய விடயங்கள் எவை என்பதை யதார்த்தமாக வரையறுத்துக்கொள்ளல் வேண்டும். அத்துடன் அவ் விடயங்கள் தொடர்பாக தான் செய்யவேண்டிய வேலைகள் என்ன, அவற்றை இலகுவாகக் கற்றுக்கொள்ள பொருத்தமான நுட்பம் என்ன என்பதைக் கண்டறிதல் வேண்டும்.

கற்கும் விதம் அல்லது கற்றல் பாணி ஆளுக்காள் வேறுபடும். பிள்ளைகள் ஒவ்வொருவரும் தமக்குப் பொருத்தமான கற்றல் பாணியைக் கைக்கொண்டு கற்ற விடயத்தை தினமும் பரிசீலித்து மதிப்பிட்டுக்கொள்ளல் வேண்டும்.

தொடர்ச்சியாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்து கற்பது பொருத்தமானதல்ல. கற்கவும் கற்றவற்றைக் கிரகித்துக்கொள்ளவும் இடையிடையே கற்கும் இடத்தில் இருந்து எழுந்து ஓய்வெடுத்தல், மனதில் மீட்டுக்கொண்டு வெளியில் நடமாடுதல் போன்ற செயற்பாடுகள் கற்ற விடயத்தை மனதில் பதியவைக்கும்.

கற்கும் சூழல் மனத்துக்கு இனிதாகவும், மகிழ்வூட்டுவதாகவும், அமைதி நிறைந்ததாகவும், கவனத்தைச் சிதைக்கும் அம்சங்கள் இல்லாததாகவும் இருத்தல் வேண்டும்.

குறிப்பாக பிள்ளைகளின் கற்றலில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில் கைப்பேசி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள், அவற்றினூடாக வழங்கப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பில் பெற்றோர் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

சுய கற்றலுக்கு வாய்ப்பளிக்கும் இணையத்தளங்களைப் பயன்படுத்த பிள்ளையின் ஈடுபாட்டைத் தூண்ட வேண்டும். தமது பிள்ளைக்குப் பொருத்தமான கற்றல் சூழலை ஏற்படுத்தி பிள்ளையை சுயகற்றலுக்கு ஊக்கப்படுத்தி தேசிய மட்டத்தில் இடர் நிலவும் இக்கால கட்டத்திலும் கற்றல் அடைவை மேம்படுத்த தயாராதல் வேண்டும். இது எமது கல்விப் புலத்தில் காலத்தின் தேவையாகும்.