சடலங்களில் இருந்து கிருமித் தொற்று ஏற்படாத விதமாகப் பொதி செய்யும் 1000 பாதுகாப்பு பொதிகளை வழங்குமாறு செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவைக் கேட்டு சுகாதார அமைச்சு கடிதம் ஒன்றை அந்த அமைப்புக்கு அனுப்பியுள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ் கடிதம் அனுப்பப்பட்டதை உறுதிப்படுத்தினார் என்றும் கூறப்பட்டது.
இருப்பினும், இலங்கையில் கொரோனா அச்சுறுத்தலின் தீவிரத்தன்மை இதற்குக் காரணம் அல்ல என்று அவர் கூறினார்.
தேவைப்பட்டால் பயன்படுத்த நாட்டில் பாதுகாப்பான கொள்கலன்கள் இல்லை என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்திய பின்னர், இதுபோன்ற 1,000 பாதுகாப்பு பொதிகளை வழங்கும் திறன் தங்கள் அமைப்புக்கு இருப்பதாக செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தெரிவித்துள்ளது.
நிர்வாக நடைமுறைகளின்படி, செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவிடம் முறைப்படியான கோரிக்கையை சுகதார அமைச்சு விடுத்துள்ளது.
உடல்களைப் பொதி செய்யும் இந்த பாதுகாப்பு பொதிகள் உடல்களை தகனம் செய்வதற்கு மட்டுமல்ல, சந்தேகத்திற்குரிய சடலங்களை மீள எடுக்க வசதியாகப் பொதி செய்து புதைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.