115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்

0

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் 115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் இன்று (திங்கட்கிழமை) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 29ஆம் திகதி முதற் கட்டமாக பாடசாலைகள் திறக்கப்பட்டு கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அதிபர், ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தரம் 05, தரம் 11 மற்றும் 13ஆம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

தரம் 05 மாணவர்களுக்கு காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணிவரை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

அத்தோடு, தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு காலை 7.30 தொடக்கம் மாலை 3.30 வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து ஏற்கனவே பெற்றோர்களுக்கு அதிபர்கள் மூலம் அறிவுருத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து மாணவர்களும் முககவசம் அணிவதும் சமூக இடைவெளியை பேணுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், சமூக இடைவெளியை பேணும் வகையில் வகுப்பறைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அனைத்து பாடசாலைகளிலும் கைகளை கழுவதற்கான வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அனைத்து மாணவர்களும் கற்றல் செயற்பாடுகளின் போது புத்தகங்கள் பேனை, பென்சில் உள்ளிட்ட பொருட்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.