16 வயது சிறுமியின் மரணம் – ரிஷாட்டின் மனைவி உள்ளிட்டவர்கள் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவரும் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை நேற்று முன்தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவர்களை 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கமைய, ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அவரின் தந்தை மற்றும் தரகர் ஆகியோரிடம் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் 36 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கொழும்பு தெற்கு குற்றவியல் பிரிவு, கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவு மற்றும் பொரளை பொலிஸார் உட்பட பல்வேறு தரப்பினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, 22 வயதான மற்றுமொரு யுவதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனரும் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 03ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்திருந்தது.

அத்தோடு, சிறுமி தங்கியிருந்த அறையில், எரிந்த பாகங்கள் மீட்கப்பட்டதுடன், அவை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்காக, அரச இரசாயனப் பகுப்பாய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.