170 இலங்கையர்கள் தனிமைப்படுத்தலை தவிர்த்துள்ளதாக எச்சரிக்கை

0

இத்தாலி மற்றும் கொரியாவிலிருந்து வருகை தந்த 170 இலங்கைப் பிரஜைகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையிலிருந்து, தவிர்த்து செயற்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்லாது, தமது வீடுகளில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும், இது குறித்து 119 என்ற பொலிஸ் பிரிவை தொடர்பு கொண்டு அறிவிக்க வேண்டும் எனவும், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், அவர்கள் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள் எனவும் பொது சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் தமது சொந்த வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர்கள் இதற்கு மாறாக செயற்படும் பட்சத்தில், நோய்த் தடுப்பு கட்டளை சட்டத்தின் கீழ், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மேலும் கூறியுள்ளார்.