19ஆவது திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு என்னால் எதனையும் செய்ய முடியாது – ஜனாதிபதி

0

19ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு தன்னால் எதனையும் செய்ய முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கவனத்திற்கொண்டு கூடிய விரைவில் 20ஆவது திருத்தச் சட்ட வரைபை நிறைவேற்றிவிட வேண்டும் என்றும் இந்தச் சட்ட வரைபை இழுத்தடிக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

20ஆவது திருத்தச் சட்ட வரைபு மற்றும் புதிய அரசமைப்புப் பணிகள் குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துகின்ற சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையில் பங்காளிகளாகச் செயற்பட்டு வருகின்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போதே ஜனாதிபதி மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

மேலும் இதன்போது 2020ஆம் ஆண்டு நவம்பர் தனது முதலாவது பதவியாண்டு நிறைவு தினத்துக்கு முன்னர் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அராஜகத்தை எதிர்க்கின்ற மற்றும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வகையிலான புதிய அரசமைப்புக்கான தேவையைத் தெளிவுபடுத்தினார்.

குறிப்பாக தற்சமயம் அமுலில் உள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தால் தனது கைகள் கட்டப்பட்டுள்ளன என்றும் அதனால் 20ஆவது திருத்தச் சட்ட வரைபை முடிந்தளவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய குறிப்பிட்டார்.