20ஆவது திருத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சந்திரிகா

0

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் மிகவும் ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மறைந்த  முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 61 வது நினைவுதினம்   நேற்று (சனிக்கிழமை) கம்பஹாவிலுள்ள பண்டாரநாயக்க நினைவிடத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுனேத்ரா பண்டாரநாயக்க ஆகியோர் தலைமை தாங்கினர்.

மத சடங்குகளுடன் மறைந்த எஸ்.டபிள்யூ.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு மரியாதை செலுத்தப்பட்டு, அவருடைய சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிரி ஜெயசேகர, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,  “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக என்னால் கருத்துக் கூற முடியாது.

அந்தக் கட்சியிலிருந்து என்னை ஒதுக்கி வைத்துள்ளார்கள். மேலும், கட்சி எனது சொத்துக் கிடையாது. அதனை ஏனையவர்கள் போல தனியாக ஆட்சிசெய்யவும் நான் விரும்பவில்லை.

இதனால்தான் இன்னொரு தலைவரிடம் அந்தக் கட்சியை ஒப்படைத்தேன். ஆனால், அவர் அனைத்தையும் இன்று அழித்துள்ளார். கட்சியும் இதனால் துண்டு துண்டுகளாக பிளவடைந்துள்ளது. இதிலிருந்து கட்சியை என்னால் மீட்க முடியாது.

தற்போது 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை கொண்டுவரவும் அரசாங்கம் முற்பட்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒரு செயற்பாடாகும். இது நடைமுறைக்கு வந்தால் ஜனநாயகத்தை மறந்துவிட வேண்டியதுதான்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.