2022 ஆம் நிதி ஆண்டிற்கான 76 ஆவது வரவு – செலவுத் திட்டம்

0

பொதுஜன முன்னணி அரசின் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்.

இலங்கையின் 76 ஆவது வரவுசெலவுத்திட்டத்தை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் முதல் முறையாக சமர்ப்பித்து உரை நிகழ்த்தவுள்ளார்.

இன்று சமர்ப்பிக்கப்படும் வரவுசெலவுத்திட்டம் இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத்திட்டமாகும்.

இம்முறை வரவு செலவுத்திட்டத்திற்கு 250,534 கோடியே 6,558,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான சேவைக்காக மதிப்பிடப்பட்டதான 2,50,534 கோடியே 6,558,000 ரூபா அரசாங்கத்தின் செலவீனத்துக்குப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நாளை 13 ஆம் திகதி சனிக்கிழமை.15 ஆம் திகதி திங்கட்கிழமை, 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, 17 ஆம் திகதி புதன்கிழமை, 19 ஆம் ஆம் திகதி வெள்ளிக்கிழமை, 20 ஆம் திகதி சனிக்கிழமை, 22 ஆம் திகதி திங்கட்கிழமைகளில் இடம்பெற்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

வரவு செலவுத்திட்டத்தின் குழு நிலை மீதான விவாதங்களுக்கு. 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான ஞாயிறு தவிர்ந்த 16 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறும்.

வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இன்று வெள்ளிக்கிழமை முதல் வரவு-செலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் சுகாதார பாதுகாப்பு ஒழுங்குவிதிகளுக்கு அமைய பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க நடவடிக்க எடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் பொதுமக்கள் கலரி மக்களுக்காக திறக்கப்படாது.

வரையறுக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகள் வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது அனுமதிக்கப்படவுள்ளனர்.