நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப சிவில் சமூகத்தின் பங்களிப்பு இன்றியமையாதது – கஃபே

0

கொரோனா நோயினால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீள கட்டியெழுப்ப சிவில் சமூகங்களில் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததென கஃபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் சமூக மட்டத்தில் சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பு முக்கியமானதென கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற சிவில் சமூக அமைப்பினருடனான கலந்துரையாடலின்போது, இற்றைக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பிருந்து அதாவது 2013ஆம் ஆண்டு தொடக்கம் சிவில் சமூக அமைப்புகளை வலுப்படுத்துவதில் கஃபே அமைப்பு முக்கிய பங்கு வகித்ததென குறிப்பிட்டார்.

குறிப்பாக யுத்தத்தால் நாட்டில் காணப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக சிவில் சமூக அமைப்புகளின் குரல் ஒடுக்கப்பட்டது. மலினப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட சிவில் சமூக அமைப்புகளை மீள கட்டியெழுப்ப அப்போது கஃபே அமைப்பு செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக யுத்தம் நிறைவடைந்த பின்னர், வடக்கு கிழக்கில் சிவில் சமூக அமைப்புகளை கட்டியெழுப்புவதில் காணப்பட்ட அச்ச நிலையை போக்கி, நம்பிக்கையை கட்டியெழுப்ப பாடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.

மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் சிவில் சமூக அமைப்பினரை சந்தித்ததோடு, நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார துறைகளின் வளர்ச்சிக்கு சாதகமான பங்களிப்பை வழங்க முடிந்ததென்றும் குறிப்பிட்டார்.

அன்று கட்டியெழுப்பப்பட்ட சிவில் சமூக அமைப்புகள் இன்று வலுவான நிலையில் காணப்படுவதோடு, இன்று நாட்டினை மீள கட்டியெழுப்ப அவர்களின் பங்களிப்பு இன்றியமையாததென்றும் கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் மேலும் குறிப்பிட்டார்.