50 க்கும் மேற்பட்ட பயணிகள் நாடு திரும்பினர்!

0

சிறப்பு விமானங்கள் மூலம் இன்று 50 க்கும் மேற்பட்ட பயணிகள் நாடு திரும்பியுள்ளனர் என கொரோனா தடுப்புக்கான தேசிய கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் கட்டார் மற்றும் டோஹாவில் சிக்கித் தவித்த 54 பேரும் டுபாயிலிருந்து நான்கு பேரும் அபுதாபியிலிருந்து ஒருவரும் நாடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 59 பயணிகளும் இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 67 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மொத்தம் 6,167 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 38,863 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை முடித்துள்ளனர்.

இதற்கிடையில், சுகாதார அமைச்சினால் நேற்று 1,890 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ள அதே நேரத்தில் இலங்கையில் இன்றுவரை கிட்டத்தட்ட 2 இலட்சத்து 49 ஆயிரத்து 328 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தபட்டுள்ளன.

நேற்று நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, இலங்கையில் நேற்று நள்ளிரவு நிலவரப்படி மேலும் 14 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

அவ்வாறு கண்டறியப்பட்ட நோயாளிகளில் 07 பேர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்தும் 05 பேர் மாலைதீவில் இருந்தும் 02 பேர் சவுதி அரேபியாவில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்தது.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கை 3,169 ஆக உள்ளது, அதில் 188 மருத்துவ கண்காணிப்பிலும் 2,969 பேர் குணமடைந்துள்ளதுடன் 12 இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.