உரிய தரப்பினரின் அனுமதியின்றி, சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான முகக்கவசங்கள் நாட்டிற்குள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ள முகக்கவசங்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
தேசிய ஓளடதங்கள் அதிகார சபையின் அனுமதியின்றி, வெளிநாடுகளிலிருந்து முகக்கவசங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து முகக் கவசங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றமையினால், பாரிய சர்ச்சை நிலவி வருவதாக உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் முகக்கவசங்கள், அரசியல் அழுத்தங்கள் காரணமாக, விடுவிக்கப்படுகின்றது எனவும் அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் நாளாந்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சத்திர சிகிச்சை முகக்கவசங்கள் தேவைப்படுவதாக ஓளடத உற்பத்தி, விநியோக இராஜாங்க அமைச்சு தெரிவிக்கின்றது.
அதனால், சுமார் 10 லட்சம் வரையான சத்திர சிகிச்சை முகக்கவசங்களை நாளாந்தம் அமைச்சில் களஞ்சியப்படுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார்.
உள்நாட்டிலுள்ள 15 உற்பத்தியாளர்களிடமிருந்து அமைச்சுக்கு தேவையான முகக்கவசங்களை கொள்வனவு செய்யவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறுகின்றார்.