52 ஆயிரம் பேருக்கு இதுவரையில் தேசிய அடையாள அட்டை கிடைக்கவில்லை!

0

எதிர்வரும் பொது தேர்தலுக்கு முன்னர் 18 வயது பூர்த்தி அடைந்துள்ள அனைவருக்கும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துமாறு, நான்கு அமைப்புகளால் ஒன்றிணைந்த தேர்தல்கள் தொடர்பான பரிசீலனைகளை செய்துவரும் சுயாதீன முதன்மை செயற்பாட்டு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் போது 67 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 18 வயது பூர்த்தியாகியுள்ள 52 ஆயிரத்து 734 பேருக்கு இதுவரையில் தேசிய அடையாள அட்டை கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளதாகவும், மேலும் 264 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய எப்பிரியல் இளைஞர்களுக்கான வலையமைப்பு, ஜனநாயகத்தை நோக்கிய இளம் சட்டதரணிகளின் சங்கம், இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கத்தினர் மற்றும் ஜனநாயகத்தை நோக்கிய இளைஞர் சங்கத்தினரே ஒன்றிணைந்து இந்த சுயாதீன அமைப்பாக செயற்பட்டு வருவதுடன், இவர்கள் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, அரச நிர்வாகம் மற்றும் ஆட்பதிவுகள் திணைக்களத்திற்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

இந்த கடிதத்திலே கூறப்பட்டுள்ளதாவது,

தேசிய அடையாள அட்டை என்பது பிரஜை ஒருவரின் அடையாளமாகும். இது வாக்களிப்பு உரிமையின் பிரதான அம்சமாகும். இந்நிலையில் தேசிய அடையாள அட்டை இன்றி இருப்பது சிக்கலுக்குறிய விடயமாகும்.

இவ்வாறு தேசிய அடையாளஅட்டை இன்றி இருப்பவர்களின் விபரம் தொடர்பில் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தகவல்கள் கிடைக்கப்பெறுவது இல்லை என்று சில செயலகங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதனால் அடையாள அட்டை தொடர்பில் முறையான வேலைத்திட்டமொன்றை பிரதேச செயலகங்களுக்கு அறிமுகம் படுத்தவேண்டும்.

தகவலறியும் சட்டத்திற்கமைய நாங்கள் இந்த தகவல்களை அறிந்துக் கொண்டுள்ளதுடன் , இது தொடர்பில் 67 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து எமக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய 52 ஆயிரத்து 734 பேர் இவ்வாறு அடையாள அட்டை கிடைக்கப் பெறாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

67 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மாத்திரம் இத்தனை பேர் அடையாள அட்டையின்றி இருக்கும் போது. இன்னும் 264 செயலாளர் பிரிவுகளிலிருந்து முழுமையான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

இவற்றில் 20 செயலகங்கள் எங்களுக்கு தகவல்களை வழங்கு முடியாது என்று நிராகரித்திருப்பதுடன், ஏனைய பிரதேச செயலகங்கள் தங்களுக்கு இதுபோன்று அடையாள அட்டையின்றி இருக்கும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளன.

தேசிய அடையாள அட்டை என்பது வாக்களிப்பதற்கு மாத்திரமின்றி , ஏனைய சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கும் மிக முக்கியமானதாகும்.

இந்நிலையில் தேசிய அடையாள அட்டையின்றி இவ்வளவு தொகையானோர் இருப்பது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். அதனால் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அடையாள அட்டைகள் இன்றி இருக்கும் நபர்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதுடன்,

இவ்வாறு அடையாள அட்டைகள் இன்றி இருப்பவர்கள் தொடர்பில் பிரதேசசெயலகங்கள் அறிந்துக் கொள்வதாற்காக முறையான திட்டமொன்றை அறிமுகப்படுத்துமாறும் வேண்டுகோள்விடுக்கின்றோம்.’ என அக்கடித்த்தில் கூறப்பட்டுள்ளது.