70 நாட்களுக்கு பின்னர் சமூகத்தொற்று? – கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்ட பெண்ணின் பயண விபரம்!

0

கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று (09) உறுதிப்படுத்தப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகராக பணிபுரிந்த பெண் கடந்த 03 ஆம் திகதி விடுமுறை பெற்று நாத்தாண்டிய, கொட்டராமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மாரவில வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் வைத்திய தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

27 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் கடந்த 03 ஆம் திகதி விடுமுறை பெற்று நாத்தண்டிய, கொட்டராமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டுக்கு வந்த பின்னர் காய்ச்சல், இருமல் போன்ற கொவிட் 19 நோய் அறிகுறி காணப்பட்டுள்ள நிலையில் பின்னர் அவர் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள வைத்திய நிலையம் ஒன்றில் சிகிச்சைப் பெற்றுள்ளார்.

சிகிச்சை பெற்றப் பின்னர் அவரின் நோய் அறிகுறிகள் குறைந்துள்ள போதும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அவர் சேவைப் புரிந்து வந்தவர் என்பதால் அவர் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க நடவடிக்கை எடுத்ததாக வைத்தியர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்தார்.

பின்னர் குறித்த பெண் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (09) அவருக்கு கொரோனா 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, குறித்த பெண் பொது போக்குவரத்தை பயன்படுத்தி விடுமுறைக்கு வீடு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது, அவர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு சொந்தமான கெப் வாகனமொன்றில் பொலன்னறுவைக்கு வந்து பொலன்னறுவையில் இருந்து பேருந்து மூலம் குருணாகலைக்கு வந்துள்ளார்.

பின்னர் குருணாகலை – நீர்க்கொழும்பு பேருந்தில் அவர் தங்கொடுவ வந்துள்ளார்.

தங்கொடுவையில் இருந்து மீண்டும் பேருந்து மூலம் நாத்தாண்டியவிற்கு வருகை தந்துள்ளார்.

எவ்வாறாயினும் அவர் முகக்கவசம் அணிந்து குறித்த பேருந்துகளில் பயணித்துள்ளதாக வைத்தியர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்தார்.

இந்த கொவிட் 19 தொற்றாளரிடம் இருந்து வைரஸ் சமூகத்தில் பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பதாக இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.