9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று!

0

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.

புதிய அரசாங்கத்தின் முதல்  நாடாளுமன்ற அமர்வு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுக்கு முன்னதாக இன்று காலை 9.30 மணிக்கு புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் பதவிக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ள நிலையில், முதல் நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது.

அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

223 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இன்றைய தினம் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே பதவிப்பரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடாளுமன்ற பொதுமக்கள் கலரி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் மேற்கொள்வதை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மாத்திரமே பொதுமக்கள் பகுதியில் இருந்து பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து,  பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவின் பெயரும் குழுக்களின் பிரதித் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாக மஹிந்த யாப்பா அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய அறிவுறுத்தலின் பேரில் மிகவும் சாதாரணமானமுறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படுதல் மற்றும் வாகன அணிவகுப்பு போன்றவை இடம்பெறாது என்றும் மாறாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக முப்படையினரின் பங்களிப்புடனான கலாசார நடனம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் நிகழ்வாக பிற்பகல் 2.15 மணிக்கு விருந்தினர்களின் வருகை இடம்பெறவிருப்பதுடன், முதலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகைத் தரவுள்ளனர்.

அதன் பின்னர் புதிய சபாநாயகரின் வருகையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வருகையும் அதனையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வரவேற்கவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களால் ஜெய மங்கள கீதம் இசைக்கப்பட்டு ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படவுள்ளது.

அதன் பின்னர் படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர் மற்றும் உதவி படைக்கலசேவிதர் சபாநாயகர் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.

அதனைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதன் பின்னர், அரசியல் யாப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரைக்குப் பின்னர், நாடாளுமன்றம் பிரிதொரு தினத்திற்கு ஒத்தி வைக்கப்படும்.

நாடாளுமன்ற அங்குரார்ப்பண நிகழ்வை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர்கூட இன்றி இன்றைய நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

இம்முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எவரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை

எவ்வாறிருப்பினும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு ஒருவருக்கு வாய்ப்பு காணப்பட்டது.

எனினும் பொதுத் தேர்தல் நிறைவடைந்து இரு வாரங்கள் கடந்துள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்  குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.