வாழைச்சேனையில் வங்கிக்கு சென்ற பெண் உரப்பையில் சடலமாக மீட்பு; இருவர் கைது

0

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் உரப்பையில் வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை நகரில் அலங்கார மீன்கள் மற்றும் அலுமினிய பொருட்களை விற்பனை செய்யும் நிலையமொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த விற்பனை நிலையத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சந்தேகத்திற்கிடமான உரப்பைகளில் ஒன்றில் இருந்து உரமும் மற்றைய மூடையில் இருந்து பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

55 வயதுடைய பெண்ணொருவர் காணாமல் ​போயுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டிற்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அலங்கார மீன்கள் மற்றும் அலுமினிய பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்றிருந்த பெண்ணே காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முச்சக்கரவண்டியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

சடலம் மீதான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.