கெரவலப்பிட்டி மின் உற்பத்தி திட்டத்தின் நூற்றுக்கு நாற்பது வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கினால் அரசாங்கத்திற்கு ஒரே தடவையில் 5000 கோடி ரூபா இலாபம் கிடைப்பதுடன் அதற்கு மேலதிகமாக எல்.என்.ஜி.எரிவாயுவை 2 வருடங்களுக்குள் பெற்றுக்கொள்ளவும் முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு வருடங்களுள் உத்தேச மின் உற்பத்தி நிலையம் மற்றும் ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிறுவனத்திற்கு தேவையான எல். என். ஜி. கேஸ் நாட்டிற்கு கொண்டு வருவதற்கு புதிய நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்படும் நிலையில் மேற்படி உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி வீதம் 29 ரூபாவிலிருந்து 17 ரூபாவாக குறைவடையும்.
அதேவேளை நிர்மாணிக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மின் அலகு ஒன்று 11 ரூபாவாக குறைவடையும் என்றும் மின்சார சபை உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி மின்உற்பத்தி நிலையம் வெஸ்கோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான லங்கா டிரான்ஸ்போமர் நிறுவனத்திற்கு சொந்தமானதென்பதுடன் அதன்மூலம் 300 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பிற்காலத்தில் இம் மின் உற்பத்தி நிறுவனத்தின் நூற்றுக்கு 50 வீத பங்கு அரசாங்கத்திற்குரியது என்பதுடன் உடன்படிக்கைக்கு அமைய எதிர்வரும் 14 வருடங்களில் மின் உற்பத்தி நிலையம் முழுமையாக அரசாங்கத்தின் உடமையாகிவிடும்.
மின் உற்பத்தி நிலையத்தை மேலும் 14 வருடங்களுக்கு இலாபம் இல்லாத வகையில் முன்னெடுத்துச் செல்வதற்கு பதிலாக அரசாங்கத்தின் 50 வீத பங்கில் 40 வீதத்தை நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுக்கும்போது அதிகரித்த இலாபத்துடன் மேலும் பல பயன்களும் கிடைக்கும் அதனை அடிப்படையாகக் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதனால் கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்கில் நூற்றுக்கு நாற்பது வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அதன்மூலம் நாட்டிற்கு தேவையான எல்.என். ஜி கேஸ் பெற்றுக் கொள்ள முடிவதுடன் அரசாங்கத்திற்கு நிதியைப் பெற்றுக் கொள்ளவும் வழி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.