வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் செவ்வி
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் 5 ஆவது அலை உருவாகும் ஆபத்து
சுற்றுலாப் பயணிகளை அழைக்கும் முன்னர் நாட்டு மக்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும்
இலங்கைக்கென தனித்துவமான திரிபு உருவாகும் அபாயம் உரிமைக்காகப் போராடி தங்களுடைய உயிர்களைக் காவு கொடுக்கும் நிலையே ஏற்படும்
நேர்காணல் : யோ.தர்மராஜ்
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் நாடு மிகப் பெரிய ஆபத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும், அடுத்த இரு வாரங்களில் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை எதிர்பாராத விதத்தில் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்க தெரிவித்தார். தமிழன் வாராந்த இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி வருமாறு,
கேள்வி : நாட்டில் கொரோனா தொற்றின் நிலைமை எவ்வாறுள்ளது?
பதில்: கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகக் காணப்பட்டாலும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் மீண்டும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் அதிகளவானோர் கலந்துகொள்வதோடு, சுகாதார விதிமுறைகளையும் முறையாகக் கடைப்பிடிக்காதமையினால் கொத்தணிகள் மற்றும் உப கொத்தணிகள் உருவாகும் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது குளிர்காலம் ஆரம்பித்துள்ளதுடன், நத்தார் பண்டிகையும் வருவதால் அங்கு மீண்டும் நோயாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இலங்கையிலும் பண்டிகைகள் கொண்டாடப்படுவதால் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் அதிகமாகியுள்ளன. அத்தோடு, கொரோனாவின் அபாயம் குறையவில்லை என்பது மிக முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டியதாகவுள்ளது.
கேள்வி : பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் சுகாதார விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படாதமை தொடர்பாக அரசாங்கமும் அக்கறையற்றிருப்பது போன்றுள்ளதே?
பதில்: கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும் தொற்றுக்குள்ளானோர் இல்லையென்றில்லை. ஆகவே, ஆபத்து நீங்காமல் அதே நிலையிலேயே இருக்கின்றது. இவ்வாறான ஆபத்து இருந்தாலும் மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தளர்வுகளில் சுகாதார விதிமுறைகள் யாவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது அத்தியாவசிய கடமையாகும். மீறும் பட்சத்தில் கொரோனாவின் உச்சபட்ச ஆபத்தை சந்திக்க வேண்டிவரும். ஆகவே, பொதுமக்கள், சுகாதாரத் தரப்பினர், பொலிஸார், ஆட்சியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். குறிப்பாக, கட்டுப்பாடுகளை அமுல்படுத்தல் மற்றும் கண்காணித்தல் குழு என்பன சிறப்பாகச் செயற்பட வேண்டும். பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை எவ்வேளையிலும் மீறக்கூடிய நிலைமையே காணப்படுகின்றது. எனவே, அரசிலுள்ள கொரோனா கண்காணிப்புக் குழுவானது முறையாக செயற்பட்டு இவற்றை முகாமைத்துவம் செய்ய வேண்டும்.
கேள்வி : பண்டிகைக் காலம் ஆரம்பித்துள்ள போதிலும், எவ்விடத்திலும் இறுக்கமான விதிமுறைகள் அமுல்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. இதனால், மக்களும் கொரோனா பரவல் இல்லாதது போன்று செயற்படுவதன் ஆபத்து எப்போது வெளிப்படும்?
பதில்: தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது பொதுமக்கள் பொறுப்பற்ற வகையில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாததன் விளைவுகள் எதிர்வரும் இரு வாரங்களில் தெரியவரும். குறிப்பாக, அடுத்த இரு வாரங்களில் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை எதிர்பாராத விதத்தில் அதிகரிக்கும்.
கடந்த காலங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த நிலையில், தற்போது பண்டிகைகள், கொண்டாட்டங்களில் கடுமையாக சுகாதார விதிமுறைகள் மீறப்படுவதால் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதேபோன்று, தீவிரமடையும் நோயாளர்களும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால், தீபாவளிக் கொண்டாட்டங்களின் விளைவுகள் அடுத்த இரு வாரங்களில் தெரியவரும்.
கேள்வி : நாட்டில் டெல்ட்டா திரிபு ஆபத்துள்ள நிலையில், டெல்ட்டா ப்ளஸ் மற்றும் ஏ30 திரிபுகள் இலங்கைக்குள் நுழையும் ஆபத்துள்ளதா?
பதில்: டெல்ட்டா தொற்றினாலேயே இலங்கையில் நான்காவது கொரோனா அலை உருவானது. இதன் விளைவே தற்போதும் இங்குள்ளது. எனினும், ஏனைய நாடுகளில் அடையாளம் காணப்படும் எந்தவொரு திரிபும் இலங்கைக்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. அதேபோன்று, இலங்கைக்கென தனியானதொரு திரிபும் உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக, டெல்ட்டா ப்ளஸ் மற்றும் ஏ30 போன்ற திரிபுகள் தொடர்பாக நாங்கள் கவனம் செலுத்தும் முன்னர் இலங்கைக்கென தனித்துவமான திரிபொன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், திரிபுகள் தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக, வாரத்திற்கு ஒரு முறை இந்தத் திரிபுகள் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும்.
இல்லையேல், புதிய திரிபுகள் இலங்கைக்குள் நுழைந்து 5 ஆவது கொரோனா அலையை உருவாக்குமாக இருந்தால் நாங்கள் பாரிய ஆபத்தை சந்திக்க வேண்டிவரும். காரணம், நாங்கள் 5 ஆவது அலையை சமாளிக்கக் கூடிய நிலையில் இல்லை. ஆகவே, புதிய திரிபுகள் இலங்கைக்குள் நுழையுமாக இருந்தால் நான்காவது அலையை விட மிக மோசமான பாதிப்புக்கு முகங்கொடுக்க வேண்டிவரும்.
கேள்வி : மக்களின் செயற்பாடுகளை அவதானிக்கும்போது நாட்டில் ஐந்தாவது அலை உருவாகும் ஆபத்துள்ளதா?
பதில்: சுகாதார விதிமுறைகளை விளையாட்டாக எடுத்துக் கொண்டு பொதுமக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதைப் பார்க்கும்போது, ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
குறிப்பாக, கடந்த வாரத்தில் 150 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இவ்வாறு உப கொத்தணிகளும் உருவாகி படிப்படியாக பாரிய கொத்தணிகளாக உருவாகும் ஆபத்துள்ளது. பின்னர் அது அலையாக உருவாகி, நாட்டில் பாரிய ஆபத்தை ஏற்படுத்துவதாக அமையும். எனினும், ஐந்தாவது அலை உருவாகுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும்.
கேள்வி : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது தடுப்பூசிகள் ஆறு மாதங்களுக்கே அதன் செயற்றிறனைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தடுப்பூசிகள் செலுத்தி ஆறு மாதங்களுக்கு மேலாகியுள்ளதால் கொரோனா பரவும் ஆபத்துள்ளதா?
பதில்: தடுப்பூசிகளின் பாதுகாப்பு எவ்வளவு காலமிருக்கும் என்பது தொடர்பான விடயம் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட விடயமாகவே உள்ளது. அதன்படி, சினோபார்ம் மற்றும் பைஸர் தடுப்பூசிகளின் பாதுகாப்பு 4 அல்லது 5 மாதங்களே இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த காலங்களில் இரு தடுப்பூசியையும் பெற்றுக்கொண்ட சுகாதாரப் பணியாளர்கள் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தனர். இதனால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக தற்போது பூஸ்டர் டோஸ் வழங்கப்படுகின்றது.
தடுப்பூசியின் செயற்றிறன் குறையும் பட்சத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகலாம். ஆகவே, வேகமாக தொற்றுக்குள்ளாகும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஏனைய தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த பூஸ்டர் டோஸ் வழங்கப்பட வேண்டும் என நாங்கள் கோரிக்கை முன்வைக்கின்றோம். இரு தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறையும் என்ற கருதுகோளும் உள்ளது.
கேள்வி: தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதிருப்பவர்களிடையே கொரோனா பரவும் ஆபத்து எவ்வாறுள்ளது?
பதில்: தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களைக் காட்டிலும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களிடையே நிகழும் மரணங்கள் 11 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, தடுப்பூசி பெற்றவர்களை விடவும், தடுப்பூசி பெறாதவர்கள் கொரோனா தொற்றைப் பரப்பும் வீதமானது 6 வீதத்தால் அதிகம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆகவே, தடுப்பூசியினால் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதோடு, கொரோனா பரவும் ஆபத்தும் கட்டுப்படுத்தப்படுகின்றது. ஆனால், புதிய வகை திரிபுகள் உருவாகும்போது, அவை எந்தளவான பாதிப்பைக் காட்டும் என்பது பற்றித் தெளிவாகக் கூற முடியாதுள்ளது.
கேள்வி : பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், மாணவர்களுக்கு மத்தியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சில சம்பவங்கள் பதிவாகியுள்ளனவே?
பதில்: பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவது என்பதும், தடுப்பூசிகள் வழங்கப்படுவது என்பதும் வெவ்வேறான விடயங்களாகும். நாட்டில் எந்தவொரு ஆபத்தும் ஏற்படும்போதும் இறுதியாக மூடப்பட வேண்டியதும், ஆபத்து தணியும்போது முதலில் ஆரம்பிக்கப்பட வேண்டியதும் பாடசாலைகளே என யுனெஸ்கோ மற்றும் யுனிசெப் போன்றவை கூறுகின்றன.
இலங்கையிலுள்ள 10 ஆயிரத்து 250 இற்கு மேற்பட்ட பாடசாலைகளில், 50 வீதமான பாடசாலைகள், 200 இற்கும் குறைவான மாணவர்களையே கொண்டுள்ளன. இவ்வாறான பாடசாலைகளை முறையான சுகாதார விதிமுறைகளுடன் ஆரம்பிக்க முடியும். சுகாதார விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறு மாணவர்களை வலியுறுத்துவது முக்கியமாகும். அதன்பின்னர், 200 இற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும்.
இதேவேளை, கலப்பு கற்பித்தல் முறையையும் முன்னெடுக்க முடியும். அதாவது, வகுப்பிலுள்ள மாணவர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவை பாடசாலைக்கு அழைக்கும்போது மற்றொரு பிரிவை வீட்டில் வைத்து இணையவழியினூடாகக் கற்பிக்க முடியும். பின்னர், பாடசாலையிலுள்ளவர்களை வீட்டுக்கும், இணையவழியுள்ளவர்களை பாடசாலைக்கும் அழைத்து கலப்பு கற்றல் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தி பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும்.
இதேவேளை, ஆசிரியர்களும், கல்விசாரா ஊழியர்களும் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் அதேவேளை, மாணவர்களையும் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கட்டாயப்படுத்த வேண்டும். இவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் போது, தொற்றை கட்டுப்படுத்த முடியும். இல்லையேல், பாடசாலை மாணவர்களிடையே கொரோனா அலை உருவாகுவதைத் தடுக்க முடியாது போய்விடும்.
கேள்வி : எவ்வாறாயினும், தற்போது ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களால் மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்கும் ஆபத்துள்ளதல்லவா?
பதில்: அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற வகையில் ஏனைய தொழிற்சங்கங்களின் உரிமையை மதிக்கின்றோம். எந்தவொரு தொழிற்சங்கமும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உரிமையுள்ளது. எனினும், தற்போதுள்ள சூழ்நிலையில் ஒன்றுகூடல்களை முன்னெடுத்து தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது கொரோனா பரவலைத் தீவிரப்படுத்தும்.
எனவே, இந்த ஆபத்தை விளங்கிக்கொண்டு தொழிற்சங்கங்கள் தங்களுடைய போராட்டங்களின் வடிவத்தை மாற்றியமைக்க வேண்டும். அல்லது உரிய தரப்புடன் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மாறாக, ஒன்றுகூடல்களை ஏற்படுத்தி பாரிய போராட்டங்களை முன்னெடுத்தால் கொரோனா பரவுவதைத் தடுக்கவே முடியாது. வேறொரு உரிமைக்காகப் போராடி தங்களுடைய உயிர்களைக் காவு கொடுக்கும் நிலையே ஏற்படும்.
கேள்வி : இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளால் மிகப்பெரிய ஆபத்து நாட்டை நெருங்கிக் கொண்டிருக்கின்றது எனக் கூற முடியுமா?
பதில்: நிச்சயமாக. மக்கள் தொடர்ந்து பொறுப்பற்ற வகையில் செயற்பட ஆரம்பிக்கும்போது, மிகப்பெரிய ஆபத்து நாட்டை நெருங்கும். குறிப்பாக, நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை என்பன அசாதாரண முறையில் அதிகரிக்கும். அது மிகப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
கேள்வி : சுற்றுலாப் பயணிகளை அழைக்கும் செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: சுற்றுலாப் பயணிகளை அழைப்பதற்கு முன்னர் நாட்டிலுள்ள மக்கள் எவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதை அவதானிக்க வேண்டும். முறையான சுகாதார விதிமுறைகளை நாட்டிலுள்ள மக்கள் பின்பற்றாத பட்சத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மாத்திரம் கொரோனா பரவும் என்று கூறமுடியாது. எனினும், சுற்றுலாப் பயணிகள் சுகாதார அமைச்சின் கண்காணிப்பின் கீழ் அழைக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது.