வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

0

தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

அநுராபுரத்தில் இன்று (09) நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட பொதுக்கூட்டம் அநுராதபுரம் – சல்காது மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.

கூட்டம் ஆரம்பமாகி சில நிமிடங்களின் பின்னர் கட்சியின் ஸ்தாபகர், தேசிய அமைப்பாளர் அமைச்சர் பசில் ராஜபக்ஸ கூட்டத்திற்கு வருகை தந்தார்.

அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தனர்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சிகள் நாட்டை சீர்குலைக்க முயல்வதாக குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சிகள் சதித்திட்டங்களை கைவிட்டு, தம்மோடு இணைந்து பணியாற்ற முடியுமானால் இணைந்துகொள்ளுமாறு பிரதமர் சவால் விடுத்தார்.

இதேவேளை, இலவச உரம் வழங்குவதாகவும் நெல்லின் நிர்ணய விலையை அதிகரிப்பதாகவும் வாக்குறுதி வழங்கி, அதனை தனது முதற்கடமையாக கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

உரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விவசாயிகளின் வருமானத்தை 100 வீதம் அதிகரிப்பதாகவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.

பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் போது, அன்று வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என அவர் தெரிவித்தார்.