கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததும் தேர்தலுக்கு செல்வதே நாட்டின் தேவை

0

கொரோனா தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, உடனடியாக பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதே நாட்டின் தேவையாக உள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “பொதுத் தேர்தலொன்று தற்போது முக்கியமாக இல்லையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால், இந்த நாட்டை மீண்டும் இயல்பு நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கடைசி தொற்றாளரையும் குணப்படுத்திவிட்டு, இன்னுமொரு தொற்றாளர் அடையாளம் காணப்படாத நிலையிலும், 28 நாட்களுக்கு எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சாத்தியமான ஒன்றா என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல்களை மேற்கொள்ளும் முகாம்கள், விசேட வைத்திய அதிகாரிகள் என அனைத்தும் தயாராகவே இருக்கிறது. கொரோனாவுக்கு தோல்வியும், ஜனநாயககத்துக்கு வெற்றியும் கிடைக்கக்கூடிய தருணம் வந்துவிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் கூட தெரிவித்துள்ளார்.

இந்த இடத்தை நோக்கித்தான் நாம் பயணிக்க வேண்டும். இந்த நிலையில், மக்களின் ஜனநாயக உரிமையை தடுப்பதானது, கீழ்த்தரமான அரசியல் நோக்கம் என்றுதான் கூறவேண்டும். இன்று சுகாதாரத் தரப்பினர் தேர்தலொன்றுக்குச் செல்ல முடியுமான கால நிலை நாட்டில் நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை கருத்தில் கொள்ள வேண்டும். பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி, புதிய நாடாளுமன்றை விரைவில் ஸ்தாபிக்க வேண்டும். இதனைத்தான் அரசியலமைப்பும் வலியுறுத்துகிறது” என கூறினார்.