ஆட்சியாளர்களின் சிந்தனையில் மாற்றம் தெரிகிறது: சுமந்திரன்

0

தற்போதைய ஆட்சியாளர்களின் சிந்தனையில் மாற்றம் இருப்பது தமக்குத் தெரிவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் மின்னல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மாறுகின்ற சூழலில் அவர்களின் சிந்தனையிலும் மாற்றம் இருப்பது எமக்குத் தெரிகின்றது.

2011 ஆம் ஆண்டு நாம் 18 சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தினோம். அவர்கள் அதன்போது எதனையும் செய்யத் தயாராக இருக்கவில்லை என்பது எமக்குத் தெரியும்.

ஆனாலும், அந்தப் பேச்சுவார்த்தைகள் கூட 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அழைத்து சொன்ன பின்னர் தான் அந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

இன்றைக்கும் அந்த சூழல் இருக்கிறது. கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி ஆனவுடனேயே முதலாவதாக அவர் அழைக்கப்பட்டது, இந்தியாவிற்கு. அங்கேயும் சொல்லப்பட்ட செய்தி இதுதான்.

அதற்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஸவையும் அழைத்து அதே செய்தியைத் தான் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு தீர்வை நோக்கி நகர்வதற்காக சில சில அறிகுறிகள் தென்படுவது எங்களுக்குத் தெரிகிறது

என சுமந்திரன் மின்னல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

எந்த சாதகமான சூழ்நிலையையும் மக்களுடைய சாதகத்திற்கான ஒரு விடயமாகப் பாவித்திக்கொள்ள வேண்டும் என சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

மேலும், அதிகாரப் பகிர்வு அதியுச்சமாக இருக்க வேண்டும் என்று குறைந்தது வாயளவிலாவது ஏற்றிருக்கிறார்கள் எனவும் அதிகாரப் பகிர்வை வழங்குவதாக மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு மூன்று தடவைகள் உறுதிமொழி கொடுத்திருப்பதாகவும் சுமந்திரன் கூறினார்.