A/L பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி – கொரோனா தொற்றிய மாணவர்களுக்கு 29 பரீட்சை நிலையங்கள்

0

2021 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, COVID தொற்றுக்குள்ளாகியுள்ள க.பொ.த. உயர்தர மாணவர்களுக்காக 29 வைத்தியசாலைகளில் சகல வசதிகளுடன் கூடிய பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்தார்.

COVID தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கான பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகள் தொடர்பான தகவல்களை, WWW.DOENETS.LK எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, COVID தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சார்த்திகள், தமக்கான அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சென்று, தாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையை பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்துவதும் கட்டாயமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரே, பரீட்சை மத்திய நிலையங்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள விசேட அறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பம் குறித்த பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சார்​த்திகள், இது தொடர்பிலான மேலதிக தகவல்களை தமது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளிடமோ அல்லது 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தியோ பெற்றுக்கொள்ள முடியுமெனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.