RTI இல் மைத்திரியின் முக்கிய தகவல் அம்பலமானது

0

தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பயன்படுத்தி ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 277 கிலோ மீற்றர் தூரம் பயணித்துள்ளார்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, தமிழ்மிரர் பத்திரிகை, இலங்கை விமானப்படைத் தலைமையகத்திலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களிலேயே மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது.

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு அதி முக்கிய பிரமுகருக்கான ஹெலிக்​கொப்டர்களே, இலங்கை விமானப் படையால் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர்களை 535 தடவைகளும், B-412 ரக ஹெலிகொப்டர்களை 22 தடவைகளும் மைத்திரி பயன்படுத்தியுள்ளார்.

சராசரியாக வருடமொன்றுக்கு 111 தடவைகள் ஹெ​லிகொப்டர்களைப் பயன்படுத்தியுள்ள மைத்திரி, 70 ஆயிரத்து 884 கடல் மைல் தூரம் அதாவது ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 277.17 கிலோமீற்றர் பயணம் செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஐந்து வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட 557 ​ஹெலிகொப்டர் பயணங்களுக்கும் எந்தவிதமானக் கட்டணங்களும் செலுத்தப்படவில்லை. இந்தப் பயணங்களுக்கான காரணங்களை விமானப்படைத் தலைமையகம் வழங்கவும் இல்லை.

புவியின் சாராசரி சுற்றளவு 40,030.17 கிலோமீற்றராகும். மைத்திரி பயன்படுத்திய ஹெலிகொப்டர் பயணங்களின்படி அவரால் மூன்று தடவைகள் பூமியின் மத்தியரேகை வழியாக உ​ல​கை சுற்றி வந்திருக்க முடியும்.