இந்திய – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கான திகதி தீர்மானம்

0

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையிலான துறைசார் பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் 22ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்க்பபட்டுள்ளது.

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வருகின்ற இந்திய கடற்றொழிலாளர்கள், இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை வலை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கடல் வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த எல்லை தாண்டிய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை காத்திரமான பலன் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாதம் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சராக பொறுப்பேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால், குறித்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையின் கடல் வளங்களும் இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளை, குறித்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களும் வாழ்வாதாரத்தினை இழக்க கூடாது என்ற அடிப்படையில் புதிய பொறிமுறை ஒன்றினை தயாரித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் குறித்த திட்ட வரைபினை இந்தியப் பிரதமரிடம் கையளித்திருந்தார்.

குறித்த திட்டம் தொடர்பாக இந்தியத் தரப்பினரால் திருப்தி தெரிவிக்கப்பட்டதுடன். கடந்த 2016 மற்றும் 2018 ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்து, குறித்த விவகாரத்திற்கு நிரந்தரை தீர்வினை காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏற்பட்ட கொவிட் 19 காரணமாக உலகளாவிய ரீதியில் தோன்றிய அசாதாரண சூழல் காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இழுபட்டு வந்ததையடுத்து கடற்றொழில் அமைச்சர் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியினையடுத்து எதிர்வரும் 22ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் காணொளி ஊடாக பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இலங்கை இந்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.