இந்திய மீனவர்களை கடற்பரப்பிலிருந்து நாமே துரத்தியடிக்க வேண்டியிருக்கும் முல்லை மீனவர்கள் எச்சரிக்கை!

0

முல்லைத்தீவு – கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் எடுக்கவேண்டும் என முல்லைத்தீவு மீனவர்கள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவறினால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாரிய போராட்டத்தில் ஈடுபடுவதுடன், இந்திய மீனவர்களை முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து தாமே துரத்தியடிக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று(வெள்ளிக்கிழமை) தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடும் இந்திய மீனவர்களை துரத்துவதற்காக படகுகளில் கடலுக்குச் செல்லத் தயாராகியிருந்தனர்.

அப்போது அங்கு வருகை தந்த முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் மற்றும், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடமே மீனவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு கடற்பரப்பில் அண்மைய நாட்களாக இடம்பெறும்  இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்திருக்கும் நிலையில், குறித்த செயற்பாட்டை தடுப்பதற்காக முல்லைத்தீவு மீனவர்கள் 25 படகுகளில் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்.

குறித்த இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பில் உரிய அதிகாரிகள், கடற்றொழில் அமைச்சர், கடற்படையினர் போன்றோருக்குப் பலதடவைகள் தெரியப்படுத்தியிருந்த நிலையில் அவர்களால் இதுதொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.

இந் நிலையிலேயே நேற்றைய தினம் முல்லைத்தீவு மீனவர்கள் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை ஆகியோர்  இணைந்து, கடலில் அத்துமீறி நழைந்து தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுப்பதற்கு கடலுக்குள் செல்வதற்குத் தயாராகியிருந்தனர்.

இந் நிலையில் இவ்வாறு மீனவர்கள் கடலுக்குச் செல்லவிருப்பதை அறிந்த முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் எஸ்.கலிஸ்ரன், நீரியலவளத்திணைக்கள அதிகாரிகள் கடற்கரைப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

கடற்கரைப் பகுதிக்கு வருகைந்த அரச அதிகாரிகள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் மீனவர்களுடன் நீண்டநேரம் கலந்துரையாடினர்.

குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்கள் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அவ்வாறு எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுத்தரத் தவறினால், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மீனவர்களால் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதுடன், போராட்டத்தினைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் சென்று இந்திய மீனவர்களை முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என மீனவர்கள் சார்பில் வருகை தந்த அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்து.

இந்த நிலையில் அங்கு வருகைதந்த மேலதிக அரச அதிபர் க.கனகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,

இது இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் உள்ள பிரச்சினை. எனவே இப் பிரச்சினைக்கு இராஜ தந்திரவழியிலேயே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.

மாறாக இரு நாட்டு மீனவர்களும் நேரடியாகமோதிக்கொள்வது மேலும் பிரச்சினைகளை உருவாக்குவதாக அமையும்.

ஆகவே இப் பிரச்சினை தொடர்பில் மாவட்டசெயலர் க.விமலநாதன் ஊடாக வடமாகாண ஆளுநர், கடற்றொழில் அமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்குத் தெரியப்படுத்தி உரிய தீர்வினைப் பெற்றத்தருவதாக உறுதியளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மீனவர்கள் கடற்கரையிலிருந்து விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.