இம்முறை எனக்கு ஆணை தாருங்கள் நிச்சயம் உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இனவழிப்பை மேற்கொண்ட அரசாங்கம், உரிமைகளைப் பகிரங்கமாக அபகரிக்கும் மிகச்சூட்சுமமான முயற்சிகளில் ஈடுபட்டு, தமிழரின் கண்களுக்குள் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருக்கின்றது. அதற்கு, தமிழர் ஒருபோதும் அடிபணியக்கூடாது.
தமிழர் பிரதேசங்களில், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கியது போல, கிழக்கு மாகாண தொல்பொருள் ஆராய்ச்சிச் செயலணி ஊடாக, சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்ற நோக்கம், அரசாங்கத்துக்கு இருக்கின்றது என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அவற்றையெல்லாம் எதிர்த்து, எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமாயின், தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்.
எனது வெற்றி உறுதி செய்யப்பட்டது. அதற்கான ஆதாரங்களை ஊடகங்களின் வாயிலாகக் காணமுடிகின்றது. மட்டக்களப்பில் 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் 100 வேட்பாளர்களே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்ற நோக்கத்துடன் போட்டியிடுகின்றனர்.
ஏனைய சுயேச்சைக் குழுக்கள், முகவர்கள் என்ற நோக்கத்தோடு இறக்கப்பட்டவர்களாவர். 100 வேட்பாளர்களில் 95 வேட்பாளர்கள் அதுவும் தமிழ் வேட்பாளர்கள், சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்களின் ஊடாகவும், தங்களின் தேர்தல் மேடைகளிலும் என்னைத்தான் விமர்சனம் செய்து அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளைக் குறைக்க வேண்டுமானால், அது சாணக்கியனைத் தாக்கித்தான் செய்ய முடியும் என்ற நிலை வந்திருப்பது எனக்குப் பெருமையான விடயமாகும்.
நாடாளுமன்றத் தேர்தலில் பலர் இன்று போட்டியிடக் காரணம், தங்களுடைய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காகவும் தங்களுடைய தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் குறிப்பிட்டளவு வாக்குகளைப் பெற்று, சகோதர இனத்தவரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்வதனூடாகத் தங்களுக்கு எதிர்வரும் காலங்களில், தவிசாளர் பதவி, வாகனம், டீசல், பெற்றோல், சம்பளம் போன்ற விடயங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே சிலர் செயற்படுகின்றனர்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரை உருவாக்குவதற்கான வேலைத்திட்டமே, இவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாகும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.