கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பில் தேர்தல் பிரசாரத்தினை முன்னெடுப்பது சிரமம் – ரவி கருணாநாயக்க

0

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பில் தேர்தல் பிரசாரத்தினை முன்னெடுப்பது சிரமம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசியல் கட்சி முக்கியஸ்தர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாம் தேர்தல்கள் ஆணையாளருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டோம்.

இதன்போது விசேடமாக கொழும்பு மாவட்டத்தில் பண்டாரநாயக்க மாவத்தையில் அதிகளவானோர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டினோம்.

அந்த இடமும் அபாய வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 900 வேட்பாளர்கள் காணப்படுகிறார்கள். இவ்வாறான நிலையில், நாம் எவ்வாறு எமது பிரசாரப் பணிகளை மேற்கொள்வது சிரமமான ஒன்றாகும்.

இதுதொடர்பாகவும் அவரிடம் சுட்டிக்காட்டினோம். சுகாதார அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸாரின் ஆலோசனைக்கு அமைவாகவா பொதுத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் வினவினோம். அவர் இதற்கு இல்லையென்று பதிலளித்தார். இதுதான் நிலைமையாகும்“ எனத் தெரிவித்துள்ளார்.