கொவிட் பரவலும், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களும் – வெளியிடப்பட்ட அறிக்கை

0

கொவிட் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் பாதிக்கப்பட்டிருந்த 60,470 இலங்கையர்கள் மீள நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து 33 மாணவர்கள் முதன் முறையாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நாள் முதல், இன்று வரை 60,470 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 40,000திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதுடன், ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 20,000திற்கும் அதிகமான இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் மாணவர்கள், யாத்திரிகர்கள், அரச ஊழியர்கள், பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என பலரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், கொவிட் தொற்றினால் வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சுமார் 68,000 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேலும் கூறுகின்றார்.