சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் துரித வேகத்தில் பறிக்கப்படுகின்றன

0

தன்னிச்சையான கைதுகள் கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மக்கள் உரிமைகள் குழுவென்ற அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமை விவகாரங்கள் குறித்த பரப்புரைகளை மேற்கொண்டுள்ள மக்கள் உரிமை குழு அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

கருத்துச்சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் உரிய நடைமுறைகளை பின்பற்றப்படுதல் நியாயமான விசாரiணைகள் போன்ற மக்களின் அடிப்படை உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சமீபகாலத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து குறிப்பிட்ட அமைப்பு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

இவ்வாறான மீறல்கள் தொடச்சியாக காணப்பட்டுள்ள போதிலும் தனது கருத்தினை வெளிப்படுத்தியமைக்காக ரம்ஜி ராசீக் என்ற சமூகசெயற்பாட்டாளர் கைதுசெய்யப்பட்டமையும், பிரபலமான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைதுசெய்யப்பட்டமையும் இலங்கையில் சட்டத்தின் ஆட்சியின் வீழ்ச்சி குறித்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தவிர கொவிட் 19 தொடர்பான கட்டுப்பாடுகளை விதிக்கும் பொலிஸ் ஊரடங்குகள், போன்றவற்றினால் கருத்துசுதந்திரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என மக்கள் உரிமைகள் குழு கவலை வெளியிட்டுள்ளது.

ஏப்பிரல் 10 ம் திகதி தீவிரவாத கொள்கைகளிற்கு எதிராக கொள்கை ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என தனது முகநூலில் பதிவு செய்தமைக்காக ரம்ஜிராசீக் கைதுசெய்யப்பட்டார் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அவர் இனவெறிக்கு எதிரானவர் சமூக ஐக்கியம் சமத்துவம் மற்றும் நீதியை ஊக்குவிப்பவர் என்பது அவரது முகநூல் பதிவுகள் மூலம் வெளியாகியுள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர் மீது ஐசிசிபிஆர் மற்றும் சைபர் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் ஆபத்துள்ளது என குறிப்பிட்டுள்ள மக்கள் உரிமைகள் குழு மனித உரிமை ஆணைக்குழு வெறுப்பை தூண்டும் பேச்சு குறித்த சட்டங்கள் பற்றி வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்களை இலங்கை காவல்துறையினர் புறக்கணிப்பது கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளது.

பௌத்தத்தை இழிவுபடுத்தும் நாவலை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் எழுத்தாளர் சக்திக சத்குமார தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதும், பௌத்த இலச்சினைகள் காணப்பட்ட சேலையை அணிந்தமைக்காக இஸ்லாமிய பெண் கைதுசெய்யப்பட்டமையும் ஐசிசிபிஆர் சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான சிறந்த உதாரணங்கள் என மக்கள் உரிமை குழு தெரிவித்துள்ளது.