நாடாளுமன்ற வளாகத்திற்குள் வாவியில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து!

0

பாராளுமன்றத்தில் கடமையாற்றும் பணியாளர்களை அழைத்து செல்வதற்காக வருகைத் தந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, தியவன்னா வாவிக்கு அருகில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றதை அடுத்து, பாராளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இன்றைய தினம் பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பாராளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாராளுமன்ற பணியாளர்களை ஏற்றிக் கொண்டு மீண்டும் திரும்பிய வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த விபத்து நேரும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் கடமையாற்றும் 30 முதல் 35 வரையான பணியாளர்களே பஸ்ஸில் இருந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பஸ்ஸில் பயணித்தோருக்கு சிறு காயங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.