நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டது ஊரடங்குச் சட்டம்!

0

நாட்டின் சில பகுதிகளில் இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்கள், கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் உள்ளிட்ட பகுதிகளிலேயே ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.

இதன்போது வங்கிகளை திறந்து வைத்திருக்குமாறு அரசாங்கம் ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தது.

அத்துடன், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் மக்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் தொடர்பாகவும் அரசாங்கம் அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த அறிவுறுத்தல்களை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 15 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மேலும், நாட்டின் அதிகளவான பகுதிகளில் மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தல்களை பின்பற்றியிருந்தமையினையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

எனினும் சில பகுதிகளில் மக்கள் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் அரசாங்கத்தின் அறிவுறுதல்களையும் பொறுட்படுத்தாமல் அலைமோதித் திரிந்தமையினையும் அவதானிக்க முடிந்தது.

ஊடரங்கு சட்டம் இவ்வாறு தளர்த்தப்பட்டிருந்த காலப்பகுதியில் மதுபான சாலைகளினை மூடியே வைத்திருக்குமாறும் அரசாங்கத்தினால் ஏற்கனவே அறிவுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் இன்று தளர்த்தப்பட்ட ஊடரங்குச் சட்டம் மீண்டும் நண்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, பத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை 24 காலை 6.00 மணிக்கு நீக்கப்படவுள்ளது.

இந்த மாவட்டங்களில் நாளை நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதுடன், அது எதிர்வரும் வெள்ளிக் கிழமை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த மாவட்டங்களில் வெள்ளிக் கிழமை நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் வியாழன் காலை 6.00 மணிக்கு நீக்கப்படுவதுடன், அன்றைய தினம் நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

அத்துடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணங்கள் மேற்கொள்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டுசெல்வதற்கும் இடமளிக்கப்படும் எனவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.