நெருக்கடி நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு- தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறித்து விமல்!

0

கொரோனா வைரஸ் பரவலின் நெருக்கடியான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமை ஏற்றுக்கொள்ள கூடிய செயற்பாடு என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமரிடம் எந்தவித கோரிக்கைகளையும் சமர்ப்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், சவால்களை வெற்றிக்கொள்ளவும் எதிர்த் தரப்பினர் எந்நிலையிலும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் கடந்த 4ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களது பங்குப்பற்றலுடன் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமரிடம் கோரிக்கை உள்ளடங்கிய பத்திரங்களைச் சமர்ப்பித்தார்கள். இது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் குறிப்பிட்டப்படுகின்றன. அரசியல் நோக்கங்களை அடிப்படையாக்க் கொண்டு கூட்டமைப்பினர் பிரதமரிடம் எவ்வித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை.

அரசாங்கத் தரப்பினருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் அரசியல் ரீதியான நிலைப்பாடு வேறுப்பட்டதாகவே காணப்படுகின்றது.

எனினும், நெருக்கடி நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க கூட்டமைப்பினர் முன்வந்தமை ஏற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடாகும்” என்று குறிப்பிட்டார்.