மக்களை திசைத்திருப்புவதற்காக அரசாங்கம் பொய்யானத் தகவல்களை பரப்பி வருகின்றது – திகாம்பரம்

0

கொரோனா அச்சம் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் மக்களை திசைத்திருப்புவதற்காக அரசாங்கம் பொய்யானத் தகவல்களை பரப்பி வருவதாக எதிர்த்தரப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று கொரோனா வைரஸினால் நாட்டில் பாரிய சிக்கல் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தால் நாளுக்கு நாள் நோயளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது.

இந்த நிலையில். பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தவே அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. இது ஆபத்தான ஒரு விடயமாகும். இந்த சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்துவது பொறுத்தமான விடமாக அமையாது.

பழைய நாடாளுமன்றைக் கூட்டி, அடுத்தக்கட்ட செயற்பாடுகளை ஆராய்வதுதான் முறையான ஒன்றாக அமையும். சில அரசாங்கத்தரப்பினர் இந்த விடயத்தில் மக்களை குழப்புவதற்காக பொய்களைக்கூறி வருகிறார்கள்.

பழைய நாடாளுமன்றைக் கூட்டுவதால், பாரிய செலவு ஏற்படும் என்று கூறுகிறார்கள். நாம் எதிர்க்கட்சி என்ற ரீதியில் சம்பளம், உணவு என எதுவும் வேண்டாம் என கூறியுள்ளோம்.

ஆனால், அரசாங்கம் அதனை மேற்கொள்ளாமல் இதனை வைத்து அரசியல் செய்யத்தான் முயற்சி வருகிறது. 5 ஆயிரம் ரூபாய் நிதியைக் கூட, தங்களின் சொந்தப் பணத்திலிருந்து வழங்குவது போன்றுதான் இவர்கள் காண்பித்துக் கொள்கிறார்கள். அதிலும் பாரபட்சம் பார்க்கிறார்கள். இது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடாகும்“ எனத் தெரிவித்துள்ளார்.