வடக்கு கிழக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு இன்னொரு நீதியா- சாணக்கியன் காட்டம்!

0

வடக்கு, கிழக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு மற்றுமொரு நீதியும் என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பது முதல் அரசியல் கைதிகளின் விடுதலை வரை அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அக்கறை காட்டாத அரசாங்கம், கொலைக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளை விடுதலைசெய்து வருகின்றது.

மிருசுவில் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

எனினும், அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றது. இனியும் குரல் கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எதிர்வரும் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடபெறவுள்ள நிலையில், கூட்டமைப்பின் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடாமல், தமிழ் மக்களுக்கு சார்பான இரு வேறு வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். இப்படியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.

அதேபோன்று, வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களைச் சூறையாடும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வன இலாகா திணைக்களத்தினரும், தொல்பொருள் திணைக்களமும் துணைபோகின்றன.

எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருநாகலில் 13ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த மன்னர் காலத்து கட்டடம் ஒன்று இடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் முறைப்பாடு செய்து 24 மணித்தியாலங்கள் கடந்தும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என தொல்பொருள் திணைக்களத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியாயின் வடக்கு, கிழக்கிற்கு ஒரு நீதி, தெற்கிற்கு ஒரு நீதி என்ற அடிப்படையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றதா என்பதே எமது கேள்வியாகும்.

இப்படியான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். தமிழ் மக்கள் அதற்கான ஆணையினை எமக்குத் தரவேண்டும். இதன் ஊடாகவே தமிழ் மக்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.