விரும்பியோ, விரும்பாமலோ நமது முன்னோர்கள் கடைப்பிடித்த விடயங்களை கடைப்பிடித்தே ஆக வேண்டும்!

0

விரும்பியோ,  விரும்பாமலோ நமது முன்னோர்கள் கடைப்பிடித்த விடயங்களை கடைப்பிடித்தே ஆக வேண்டும் என கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலையை வெற்றி கொள்வதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அறிவித்தல்களை மக்கள் ஏற்று அதற்கேற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

எல்லோரும் ஒன்றாக பயணித்து  தனிநபர் சுகாதாரத்தினை பேணுகின்ற போதுதான் நோய் தொற்றில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

இந்து சமயத்தில் பல்வேறு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. எப்போதும் ஒருவரை கண்டவுடன் வணக்கம் செலுத்துவதே எமது பாரம்பரியம். அப்பாரியத்தினை விரும்பியோ விரும்பாமலோ உலகில் உள்ள அனைவரும் கடைப்பிடிக்கும் நிலை தற்போது உருவாகி உள்ளது. வீட்டை விட்டு வெளியில் சென்று வந்தால் கை, கால் முகம் கழுவிய பின்பு வீட்டுக்குள் நுழைய வேண்டும் என்ற பாரம்பரியம்,  பண்பாடு,  வழக்கம் இருந்தது. காலப்போக்கில் இவை குறைவடைந்திருக்கின்றது. ஆனால் தற்போது அவற்றை கட்டாயம் கடைபிடிக்கும் நிலை உருவாகி உள்ளது.

வீட்டில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் பல முன்னெடுக்கப்பட்டன.  கோலம் போடுதல், மஞ்சள் நீர் தெளித்தல், துளசி மரம் நாட்டுதல் போன்றவைகளை குறிப்பிட முடியும்.

தற்கால சூழலில்,  வீடுகள், சமய தலங்கள்,  பொது இடங்களில் சுகாதார திணைக்களங்களின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும். தனிமனித சுகாதாரத்தில் மிகவும் கவனம் செலுத்துவதன் மூலமே சமூக ஆரோக்கியத்தினையும்,  தேசத்தின் ஆரோக்கியத்தினையும் பேண  முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.