வைரஸ் தொற்றாளரின் சுற்றுப்பயணத்தால் மன்னார், தாராபுரம் முழுமையாக முடக்கப்பட்டது!

0

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள தாராபுரம் கிராமம் இன்று அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 18ஆம் திகதி மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு புத்தளத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த 15ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 18ஆம் திகதி மன்னார் தாராபுரம் கிராமத்திற்குச் சென்று மரணச் சடங்கில் கலந்துகொண்டு பின்னர் மீண்டும் புத்தளத்திற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் புத்தளத்தில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பின்னர் சமூக ரீதியில் இடம்பெற்ற பரிசோதனையில் அவரும் பரிசோதிக்கப்பட்டார். இதன்போது அவர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உடனடியாக மன்னாரில் உள்ள உறவினர்களுக்கு இதுகுறித்து அறிவித்துள்ளதோடு, பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக மன்னார் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினரும் குறித்த கிராமத்திற்குச் சென்று தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முடக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த நபர் அங்கு சென்று நின்ற இரண்டு நாட்களில் அவருடன் நெருங்கிப் பழகிய இரண்டு குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு சமூக நோய் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

முழுமையாக முடக்கப்பட்டுள்ள தாராபுரம் கிராமத்தில் உள்ள மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் மாவட்டச் செயலக அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.