அதி தீவிரமாகப் பரவும் கொரோனா வைரஸ்: உயிரிழப்பு 13 ஆயிரத்தைத் தாண்டியது!

0

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது

இத்தாலியில் ஒரே நாளில் 793 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து அங்கு, மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை நெருங்குகிறது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3 இலட்சத்து 8 ஆயிரத்து 231 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 13 ஆயிரத்து 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 874 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 95 ஆயிரத்து 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனாவால் அதிகளவில் உயிரிழப்பைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இத்தாலியில் நேற்று மட்டும் 793 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை நெருங்குகின்றது.

இதேவேளை, ஆசிய நாடான சிங்கப்பூரில் இந்த வைரஸ் தொற்றுக் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். அங்கு, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே கொரோனா தாக்கம் காரணமாக பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், முதல் உயிரிழப்பு நேற்று பதிவாகியுள்ளது.

உலகளாவிய ரீதியில் இத்தாலியில் அதிகபட்சமாக 4 ஆயிரத்து 825 பேரும், சீனாவில் 3 ஆயிரத்து 261 பேரும், ஸ்பெயினில் ஆயிரத்து 378 பேரும் இந்நோய்த் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடான ஈரானில் ஆயிரத்து 556 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.